துல் ஹஜ் மாத முதல் 10 தினங்களும் குர்பானியின் (உளுகியா ) சட்டங்களும்

அல்லாஹ் கூறுகிறான் : பத்து இரவுகள் மீது சத்தியமாக! (அல்குர்ஆன் 89:2) 10 இரவுகளை உள்ளடக்கிய இந்த துல் ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்களின் சிறப்பு என்ன என்பதை அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதன் மூலம் புரிந்து கொள்ளலாம்.
துல்ஹஜ் மாதத்தில் முதல் 10 நாட்களில் செய்யப்படும் நல் அமல்களைப்போல அல்லாஹ்விற்கு பிரியமான அமல் வேறு இல்லை என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்பொழுது அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வதையும் விடவா! என நபித்தோழர்கள் கேட்டார்கள். ஆம்! அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வதை விடவும்தான். என்றாலும் போரில் உயிரையும், பொருளையும் தியாகம் செய்து வீர மரணமடைந்தவரைத் தவிர என்று கூறினார்கள். (அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரழி) நூல் : புகாரி)

இஸ்லாமிய சமூகத்தில்; வசதி படைத்தவர் அல்லாஹ்வால் இடப்பட்ட கட்டளையாகிய ஹஜ், குர்பானி போன்றவைகளை நிறைவேற்றிக்கொண்டிருக்கும் அதே வேளையில், நமக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லையே என்று ஏங்கிக் கொண்டிருக்கும்; அல்லது அக்கடமையை ஏற்கனவே நிறைவேற்றி விட்டு இருக்கும் மற்ற முஸ்லிம்களும் நன்மையில் பங்கு கொள்ள வேண்டு மென்பதற்காக உலக மக்களுக்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட உண்மைத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் துல்ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்களுக்கு இவ்வளவு பெரிய சிறப்பை கொடுத்துள்ளார்கள். மேலும் இந்த 10 நாட்களில் இன்ன அமல்கள் தான் செய்ய வேண்டும் என்றில்லாமல் அல்லாஹ்விற்கு விருப்பமான எந்த அமல்களை செய்தாலும் அது அல்லாஹ்விற்கு விருப்பமானதாகவும், இறைவழியில் போர் செய்வதை விட சிறந்ததாகவும் அமையும் என்பதை மேலுள்ள ஹதீஸ் மூலம் விளங்கமுடிகிறது. ஆனால் இன்றைக்கு இந்த நாட்களின் சிறப்பை முழுமையாக அறியாமல் 10ஆம் நாளுக்கு மட்டுமே சிறப்பை கொடுப்பதை பார்க்க முடிகிறது! இன்னும் துல்ஹஜ் மாதம் என்றாலே 10ஆம் நாள் மட்டுமே மக்களுக்கு நினைவுக்கு வருகிறது ஆனால் பின் வரும் செயல்களை செய்வதன் மூலம் அந்த 10 நாட்களில் அல்லாஹ்வால் வழங்கப்படும் வெகுமதியை பெற்றுக் கொள்ள முடியும்.
 
நல் அமல்களுக்குரிய நாட்கள்
இந்த 10 நாட்களில் நஃபிலான தொழுகைகள், நோன்புகள், தர்மங்கள் போன்ற உபரியான வணக்கங்களை அதிகப்படுத்துவதன் மூலம் அதிகமான கூலி கிடைக்கும். மேலும் இந்த பத்து நாட்களில் தக்பீர்களை அதிகமாக கூறுவதன் மூலமும் நன்மையை பெற்றுக் கொள்ளமுடியும். இதற்கு ஆதாரமாக நபித்தோழர்கள் இப்னு உமர் (ரழி), அபூஹூரைரா (ரழி) ஆகிய இருவரும் கடை வீதிக்குச் செல்லும் போதெல்லாம் தக்பீர்களை கூற அதைக் கேட்டு மக்களும் தக்பீர் கூறியதைக் காணலாம்; (நூல் : புகாரி)

ஆனால் இன்றைக்கு வழக்கத்தில் 9 ஆம் நாள் துவங்கி 13 ஆம் நாள் வரை ஒவ்வொரு ஃபர்ளான தொழுகைக்கு பிறகு தக்பீர் ஓதும் வழக்கத்தை மட்டுமே பார்க்க முடிகிறது, ஆனால் நபித்தோழர்கள் 10 நாட்களும் செல்லும் இடங்களிலெல்லாம் தக்பீர்களை கூறியுள்ளனர் என்பதை அறிய முடிகிறது! இதனால் முதல் 8 நாட்களும் தக்பீரின் சிறப்புகளால் கிடைக்கும் நற்கூலியை இழந்து விடுகிறோம். எனவே அல்லாஹ்வின் தூதரின் வழிமுறையை தங்களது வாழ்நாளில் பின்பற்றி வாழ்ந்த உத்தமர்களின் வழியை விட்டு விட்டு இன்றைக்கு நமது நடைமுறையில் அல்லது யாரோ ஏற்படுத்திய நடைமுறைக்கு முக்கியத்துவம் கொடுப்பதை ஏற்க முடியாது. இந்த 10 நாட்களில் செய்யும் எல்லா நல்லறங்களுக்கும் அல்லாஹ் விசேஷமாக கூலி வழங்குகிறான் என்று எண்ணி செய்கின்ற பொழுது நற்கூலியை பெற்றுக் கொள்ள முடியும் அதிலும் குறிப்பாக இந்த தக்பீர்களை 10 நாட்களும் சொல்வதன் மூலம் இச்சிறப்பை பெறமுடியும்.

அரஃபா நாள் நோன்பு நோற்பது
அரஃபா நாள் என்பது துல்ஹஜ் 9ஆம் நாளாகும், அன்றைய தினம் ஹாஜிகள் அல்லாதவர்கள் நோன்பு நோற்க வேண்டும். நபி (ஸல்) அவர்களிடம் அரஃபா நாள் நோன்பு நோற்பது பற்றி கேட்கப்பட்டது அதற்கு நபி (ஸல்) அவர்கள் முந்தைய மற்றும் பிந்தைய வருடத்து பாவங்கள் மன்னிக்கப்படுகிறது என்று கூறினார்கள். (அறிவிப்பாளர் : அபூகதாதா(ரலி) நூல் : முஸ்லிம்)

எல்லா நோன்பிற்கும் எல்லா நல்லறங்களுக்கும் முந்தைய வருட பாவங்கள் மட்டுமே மன்னிக்கப்படுகிறது ஆனால் அரஃபா நோன்பிற்கு மட்டுமே பிந்தைய வருட பாவங்களும் மன்னிக்கப்படுகிறது என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து விளங்கிக்கொள்ள முடிகின்றது.

குர்பானியின் சிறப்புகள்
அல்லாஹ் கூறுகிறான்: (குர்பானி கொடுக்கப்பட்ட) பிராணிகளின் மாமிசங்களோ, அல்லது இரத்தங்களோ அல்லாஹ்வை சென்றடைவதில்லை மாற்றமாக உங்களிலுள்ள பயபக்தி (இறையச்சம்) மட்டும் தான் அல்லாஹ்வை சென்றடையும். (அல் குர்ஆன் 22:37)

குர்பானி கொடுப்பதால் அப்பிராணியின் மாமிசத்தையோ, இரத்தத்தையோ அல்லாஹ் புசிப்பதில்லை மாற்றமாக இறைக்கட்டளையை யார் நிறை வேற்றுகிறார்கள் என்று பார்க்கவே விரும்புகிறான். இந்த கட்டளையை நிறைவேற்றாமல் விட்டுவிட்டால் இறைக்கட்டளையை புறக்கணித்து நமது மனோ இச்சையை பின்பற்றி வாழ்வதாக ஆகிவிடும். இதனால்தான் அல்லாஹ் நாம் கொடுக்கும் குர்பானி மூலம் இறையச்சம் மட்டும்தான் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என பிரகடனம் செய்கிறான் எனவே இறையச்சத்தை உள்ளடக்கியதாக நமது குர்பானியை ஆக்கிக்கொள்வோம்.

யார் குர்பானி கொடுக்க வேண்டும்?
குர்பானியை வசதி படைத்த ஒவ்வொருவரும் கொடுக்கவேண்டும்! ஆடு கொடுக்கின்ற அளவு வசதி இல்லாதவர்கள் மாட்டில் ஏழு நபர்களில் ஒருவராக சேர்ந்து கூட்டாக கொடுக்கலாம். இந்த வசதியை யார் பெறுகிறாரோ அவரே வசதி படைத்தவர் என்பதன் பொருளாகும், அவரே குர்பானி கொடுக்க வேண்டும் இதற்கு குறைவாக வசதி படைத்தவர்கள் கொடுக்கத் தேவையில்லை இந்த அளவு வசதி படைத்த ஒவ்வொருவரும் குர்பானி கொடுக்க வேண்டும். அப்பொழுதுதான் இறைக்கட்டளையை நிறைவு செய்தவராக ஆகமுடியும். இல்லையேல் அவனது கோபத்தை அடைய வேண்டிவரும் இதுவரை வசதி இருந்தும் கொடுக்காதவர்கள் இப்பொழுதே கொடுக்கத் தயாராகுங்கள்! குடும்பத்தலைவர் தனக்காகவும், தனது குடும்பத்தார்களுக்கும் சேர்த்து ஒன்று கொடுத்தாலே போதுமானதாகும்.

இன்னும் சிலர் எங்கள் வீடுகளில் குர்பானி கொடுக்கும் அளவிற்கு ஆட்களில்லை அதனால் குர்பானி கொடுக்கவில்லை எனக்கூறுவதை பார்க்க முடிகிறது, இதுபோன்ற காரணங்கள் கூறி தப்பிக்க முடியாத அளவிற்கு இன்றைக்கு பல்வேறு இடங்களில் கூட்டு குர்பானி திட்டங்கள் நடை முறைப்படுத்தப்படுகிறது அதில் சேர்ந்து நாம் கொடுப்பதன் மூலம் குர்பானி கொடுத்ததன் நன்மையை பெறமுடியும் எனவே வசதியிருந்தும் எந்த காரணம் கூறியும் அல்லாஹ்விடத்தில் தப்பிக்க முடியாது என்பதை கவனத்தில் கொண்டு குர்பானி கொடுக்க தயாராகுவோம்.

குர்பானிக்கு தகுதியான பிராணிகள்
ஆடு, மாடு, ஒட்டகம் இவைகள் மட்டுமே குர்பானி கொடுக்கமுடியும், இவைகளை தேர்வு செய்யும் பொழுது கீழ்காணும் குறைகள் இல்லாதவாறு பார்த்துக்கொள்ளவேண்டும். 1. கண் பாதிக்கப்பட்டது 2. கடுமையான நோய் ஏற்பட்டது 3. நடக்க இயலாத அளவு முடமாக உள்ளது 4.மெலிந்தது. இது போன்ற ஊனங்கள் இல்லாதவாறு பார்த்து கொடுக்க வேண்டும். ஏனெனில் நாம் செய்யும் செயல்களில் நல்லதையே அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான் கெட்டவைகளை புறக்கணித்து விடுகிறான்.

குர்பானி கொடுக்கும் நேரம்

துல்ஹஜ் மாதம் 10 ஆம் நாள் பெருநாள் தொழுகை தொழுத பின்னர் தொடங்கி 13 ஆம் நாள் வரை கொடுக்கலாம். பெருநாள் தொழுகைக்கு முன்னர் யாரும் அறுத்தால் அது சாதாரண ஒன்றாக ஆகிவிடும். ஆதலால் பெருநாள் தொழுகை தொழுத பின்னரே கொடுக்க வேண்டும். (நூல் : புகாரி)

குர்பானியின் மாமிசத்தை பங்கீடு செய்யும் முறை:
அல்லாஹ் கூறுகிறான்: குர்பானி கொடுத்தவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள் (தேவையுடையோராக இருந்தும்) பிறரிடம் கேட்காதவர்களுக்கும், யாசிப்பவர் களுக்கும் கொடுங்கள். அல்குர்ஆன் : 22:36

குர்பானியின் இறைச்சியை நமது தேவைக்கு எடுத்தது போக மீதமுள்ளதை ஏழைகளுக்கு கொடுக்க வேண்டும். தேவையிருப்பின் சேமித்தும் வைத்துக் கொள்ளலாம்.(அறிவிப்பாளர் : ஸலாமாபின் அக்வஃ (ரலி) நூல் : அபூதாவூது

அதன் தோலை கூலியாக கொடுக்கக்கூடாது மாறாக அதனை தர்மம் செய்துவிட வேண்டும்.

குர்பானி கொடுப்பவர் செய்யக்கூடாதவை
குர்பானி கொடுக்க நாடியவர் துல்ஹஜ் மாதம் முதல் பிறை கண்டதிலிருந்து குர்பானி கொடுக்கும் வரை தனது முடிகள், நகங்கள் இவற்றில் எதையும் களைய வேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பாளர் : உம்முஸலமா(ரலி) நூல் :முஸ்லிம்)