ரமழான் சிறப்பு


ரமழான் மாதத்தை பற்றி அல்லாஹ் திருமறையில் கூறுகிறான் :
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம். அல்குர்ஆன் 2:183

(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும் எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும் எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). அல்குர்ஆன் 2:184

நபி(ஸல்) அவர்கள் ஷாபான் மாத கடைசியில் ஒரு பிரச்சாரம் செய்கிறார்கள். அதில் கூறுகிறார்கள். ஒரு சிறந்த கண்ணியமிக்க மாதம் அதில் ஆயிரம் மாதங்களை விட மகிமைமிக்க ஒரு இரவு உள்ள மாதம் உங்களை நோக்கி வருகிறது. அம்மாதத்தில் நோன்பு வைப்பதை அல்லாஹ் கடமையாக்கினான். அதன் இரவுகளில் நின்று வணங்குவதை சிறப்பாக்கினான். இம்மாதத்தில் ஏதாவது ஒரு நற்செயல் செய்தால் மற்ற மாதங்களின் ஃபர்லான கடமையானதை செய்த செயலுக்குரிய கூலி வழங்கப்படும். ஓரு ஃபர்லான (கடமையான) நற்செயல் செய்தால் மற்ற மாதங்களில் எழுபது ஃபர்லான நற்செயலுக்குரிய கூலி வழங்கப்படும் என்று கூறினார்கள். ஸல்மான் பின் பார்ஸி(ரழி) நூல் : பைஹகி

ரமழான் மாதம் ஏன் சிறப்புக்குரிய மாதமாக திகழ்கிறது என்றால், இந்த புனிதமிக்க ரமழான் மாதத்தில் தான் திருகுர்ஆன் அருளப்பட்டதால் இந்த மாதம் சிறப்பு பெறுகிறது. ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவான லைலத்துல் கத்ர் எனும் இரவு இம்மாதத்தில் இருப்பதால் இம்மாதம் சிறப்பு மிக்க மாதமாகிறது. நன்மை, தீமைகளை பிரித்து நேர்வழி எது என்பதை பிரித்து காட்டும் அருள் மறை திருகுர்ஆன் நபி (ஸல்) அவர்களுக்கு லைலத்துல் கத்ர் இரவில் அருளப்பட்டது. ஏனைய நபிமார்களுக்கும் ரமழான் மாதத்தில் தான் அல்லாஹ்(ஜல்) வேதங்களை வழங்கினான். நபி மூஸா(அலை) அவர்களுக்கு தவ்ராத் வேதம் ரமழான் பிறை 13ல் அருளப்பட்டது. நபி ஈஸா(அலை) அவர்களுக்கு இன்ஜில் வேதம் ரமழான் பிறை 25ல் அருளப்பட்டது. நபி இப்ராஹிம்(அலை) அவர்களுக்கு ரமழான் ஆரம்ப இரவில் சுஹ்புகள் அருளப்பட்டது. நமது தூதர் நபி (ஸல்) அவர்களுக்கு ரமழான் மாதம் லைலத்துல் கத்ர் இரவில் திருகுர்ஆன் அருளப்பட்டது. நபி(ஸல்) அவர்களுக்கு மட்டும் சிறிது சிறிது பாகங்களாக திருகுர்ஆனை வல்ல அல்லாஹ் அருளினான். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரழி) நூல் : அஹமது, இப்னு கதீர்

எவரொருவர் நோன்பாளிக்கு உண்ண உணவும் குடிக்க நீரும் கொடுத்து உதவுகிறாரோ அவருக்கு அல்லாஹ் தனது பெரிய நீர் தடாகத்திலிருந்து நீர் புகட்டி அவர் சுவனம் செல்லும் வரை தாகிக்காமல் காப்பாற்றுகிறான். அறிவிப்பவர் : ஸல்மான் பின் பார்ஸி(ரழி) நூல் : பைஹகி

ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும் (நன்மை - தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும். அல்குர்ஆன் 2:185.

நோன்பு காலத்தில் இறைவன் வழங்கிய சலுகைகள்.
1. மாதவிடாய் ஏற்பட்டவர்கள் : நோன்பை பிறகு நோற்க வேண்டும்.
2. நோயாளி : நோன்பை பிறகு நோற்க வேண்டும்
3. பிரயாணத்தில் உள்ளவர்கள் : நோன்பை பிறகு நோற்க வேண்டும்
4. கர்ப்பிணிப் பெண் : ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.
5. வயது முதிந்தவர்கள் : ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.
6. பால் கொடுக்கும் தாய் : ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.

அல்லாஹ்வும், தூதரும் நோன்பாளிக்கு வழங்கி உள்ள சலுகைக்கான ஆதாரங்களை பார்ப்போம்.
எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும் எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக - ஃபித்யாவாக - ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும் எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறிவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்). அல்குர்ஆன் 2:184

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருக்கும் போது எங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு தூய்மையடைவோம். அப்போது விடுபட்ட நோன்பை கலாச் செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளை இடுவார்கள். விடுபட்ட தொழுகைகளைக் கலாச் செய்யுமாறு கட்டளை இடமாட்டார்கள் என்று ஆயிஷா(ரழி) கூறினார்கள். நூல் : புகாரி, முஸ்லிம், அபூதாவுத்

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: கர்ப்பமான பெண் தன் குழந்தைக்கு ஏதும் ஆகும் என்று பயந்தால், நோன்பு வைப்பதால் பால் கொடுக்கும் தாய் தன் குழந்தைக்கு பால் இல்லாமல் போகுமோ என்று பயந்தால், கர்ப்பினி பெண், பால் கொடுக்கும் தாய் இவர்களுக்கும் நோன்பு வைக்காமல் இருக்க சலுகை வழங்கியதுடன் மீண்டும் அந்த(விடுபட்ட) நோன்பை திரும்ப நோற்க வேண்டியதில்லை என்று கூறியதுடன் ஒரு ஏழைக்கு உணவளிக்க கூறினார்கள். நோன்பு வைக்க முடியாத முதியவர்களையும் நோன்பு வைக்காமல் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரழி) நூல் : முஸ்லிம்

நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமழானின் கடைசி பத்து நாட்களில் இஃதிகாஃப் இருக்க கூடியவர்களாக இருந்தார்கள் அவரது மரணத்திற்கு பின் அவரது மனைவிகள் அந்நாட்களில் இஃதிகாஃப் இருப்பதை தொடர்ந்து நிறைவேற்றினர்.
அறிவிப்பவர் : ஆயிஷா(ரழி) நூல் : அபூதாவுத், முஸ்லிம்

ரமழான் மாதத்தில் ஏற்படும் சந்தேகங்களும் விளக்கமும்

1. நோன்பு காலங்களில் மனைவியுடன் கூடலாமா ?
நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள் நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான் அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான் எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள் இன்னும் ஃபஜ்ரு (அதிகாலை)நேரம் என்ற வெள்ளை நூல்(இரவு என்ற) கருப்பு நூலிலிருந்து தெளிவாகத் தெரியும் வரை உண்ணுங்கள், பருகுங்கள் பின்னர், இரவு வரும் வரை நோன்பைப் பூர்த்தி செய்யுங்கள் இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும் போது, உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள்-இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும் அந்த வரம்புகளை(த் தாண்ட) முற்படாதீர்கள் இவ்வாறே (கட்டுப்பாடுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான். அல்குர்ஆன் 2:187

2. ஊசி போடலாமா ?
உடல் நிலை மோசமாக இருக்கும் போது ஊசி போடலாம். அதே நேரத்தில் உடம்புக்கு தெம்பு ஏற்படும் குளுகோஸ் போன்றவற்றை போடக்கூடாது.

3. வாந்தி வந்தால் நோன்பு முறிந்து விடுமா ? தூக்கத்தில் விந்து வெளிப்பட்டால் நோன்பு முறியுமா?
எவருக்கும் தானாக வாந்தி வருகிறதோ அவர் நோன்பை கலா செய்ய வேண்டிய கடமை இல்லை. எவர் வேண்டும் என்றே வாந்தி எடுத்தாரோ அவர் நோன்பை கலா செய்யட்டும் என்று அபூஹுரைரா(ரழி) அறிவிக்கிறார்கள். நூல் : அஹமத், அபூதாவுத்

4. கர்ப்பினி பெண், பால் கொடுக்கும் தாய் நோன்பை விடலாமா?
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: கர்ப்பமான பெண் தன் குழந்தைக்கு ஏதும் ஆகும் என்று பயந்தால், நோன்பு வைப்பதால் பால் கொடுக்கும் தாய் தன் குழந்தைக்கு பால் இல்லாமல் போகுமோ என்று பயந்தால், கர்ப்பினி பெண், பால் கொடுக்கும் தாய் இவர்களுக்கும் நோன்பு வைக்காமல் இருக்க சலுகை வழங்கியதுடன் மீண்டும் அந்த(விடுபட்ட) நோன்பை திரும்ப நோற்க வேண்டியதில்லை என்று கூறியதுடன் ஒரு ஏழைக்கு உணவளிக்க கூறினார்கள். நோன்பு வைக்க முடியாத முதியவர்களையும் நோன்பு வைக்காமல் பகரமாக ஒரு ஏழைக்கு உணவளிக்க கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ்(ரழி) நூல் : முஸ்லிம்

5. நோன்பு வைத்தவர் மறந்து எதுவும் சாப்பிட்டால் நோன்பு முறிந்து விடுமா?
நோன்பாளி மறந்து உண்டு விட்டாலோ அல்லது பருகிவிட்டாலோ நோன்பு முறிந்து விடாது. அவர் அதை நிறைவு செய்யவேண்டும். (அபூஹுரைரா(ரழி), நூல் : புகாரி, முஸ்லிம்)

6. நோன்பு எதை கொண்டு திறப்பது ?
நபி(ஸல்) அவர்கள் பேரித்த பழம், தண்ணீர் மூலம் நோன்பு திறப்பார்கள்.

மனித வாழ்வில் மனசாட்சி!



                      பயந்து நடந்துக்கோ...."
                     "மனசாட்சி இருந்தா இப்படி செய்வியா..?"
      
இதைப்போன்ற வாசகங்கள் பாமர மக்கள் முதல் படித்த அறிவார்ந்த மனிதர்கள் வரை அன்றாட வாழ்வில் அதிகமாக பயன்படுத்துவதை காண்கிறோம். ஆக இவ்வாக்கியங்கள் மனசாட்சிக்கு பயந்தால் மட்டுமே போதுமானது எல்லா செயல்களிலும் நீதமாக இருக்க முடியும் என்பது போல் தோன்றுகிறது... உண்மையாக மனசாட்சி மட்டும் மனித வாழ்வின் எல்லா நிலைகளிலும் நீதி செலுத்த போதுமானதா - கண்டிப்பாக முடியாது ...ஏன்?
 ஒரு செயலை செய்வதால் 

ஏற்படும் விளைவு நன்மையா? தீமையா என பகுத்து அஃது தீமையே தவிர்த்து நன்மையே செய்ய தீர்மானிப்பதே மனசாட்சியின் பிரதான வேலை.பொதுவாக மனசாட்சி என்பது பெரும்பாலும் நன்மை செய்வதை அடிப்படையாக கொண்டிருந்தாலும் இரண்டு அடிப்படை காரணங்கள் மனசாட்சியின் செயல் போக்கை மாற்றுகிறது 

(1) நிலையற்ற மனித எண்ணங்கள் 
(2) மனிதர்கள் வாழும் சூழல்,சமுகம் இவ்விரு நிலைகளும் மனசாட்சியின் செயல் திறத்தை எவ்வாறு மாற்றுகிறது என்பதை பார்ப்போம்.
    மனசாட்சியின் அடிப்படை செயல் நிர்வாகத்திற்கு மிக முக்கிய காரணியாக அமைவது மனித எண்ணங்கள் ஆகும்.சாதரணமாக அனைத்து நிலைகளிலும் நன்மை தீமைகளே தரம் பிரித்து செயல்படுத்தினாலும் சாதாரண நிலை கடந்த அதாவது ஆசை, கோபம், விரக்தி, வேகம் மற்றும் தேவை போன்றவை மிகைக்கும் போது மனசாட்சியால் நன்மையை மட்டும் மேற்கொள்ள முடியாது. மாறாக அந்நேரங்களில் ஏற்படும் மனித எண்ணங்களுக்கே மனசாட்சி முக்கியத்துவம் கொடுக்கும். உதாரணமாக மனிதனுக்கு கோபம் வரும் வரை இயல்பாக பேசக்கூடியவன் அஃது கோபம் மிகுதியால் தவறான வார்த்தை பிரயோகமும் ஏன் கொலை செய்யக்கூடிய அளவிற்கு கூட அவனை தள்ளும் நிலைக்கு காண்கிறோம். 
    அதுப்போலவே., அடுத்தவர் செய்யும் ஒரு தவறை கண்டிக்கும் மனசாட்சி அதே தவறை தமது மனம் உட்பட்டு செய்யும் போதும் நியாயம் கற்பிக்கவே முயலும் மது அருந்துவது இதற்கு நல்ல உதாரணம் பொதுவாக மது அருந்துவதை வன்மையாக கண்டித்தாலும் ஏதாவது ஒரு காரணத்தை முன்னிருத்தி தாம் மது அருந்த செய்வதை மனசாட்சி தவறென்று சொல்லாது. மேலும் பாதிப்பும் -தீங்கும் மனசாட்சி செயல் போக்கை முற்றிலும் மாற்றக்கூடியவை., நாம் பிறருக்கு தீங்கோ பாதிப்போ ஏற்படுத்தாமல் இருந்தும் நமக்கு பிறரால் மிக பெரிய பாதிப்போ தீங்கோ ஏற்படுத்தப்பட்டால் பழிக்குப்பழி வாங்குவதை தான் முதலில் நமது மனசாட்சி ஊக்குவிக்கும். ஆக பிறர் நமக்கு தந்தது தீது என்று உணர்ந்தும் அதே தீமையே தான் நாம் அவருக்கு வழங்க வேண்டும் என மனசாட்சி வலியுறுத்தும் போது அதன் நீதத்தன்மை பூஜ்யமாக்கப்படுகிறது. மனதளவில் பாதிக்கப்பட்டவர், சிறுவர், வயோதிகர் போன்ற சிலரின் மனங்களே பழிவாங்கும் எண்ணம் தவிர்த்து மாற்று தீர்வை எதிர்பார்க்கிறது.           மேலும் ஆசையும் மனசாட்சியை நன்மை செய்வதை விட்டு திசை திருப்பவே செய்கிறது. விபச்சாரம் தவறு என்பது இயல்பாக நம் மனசாட்சி ஏற்றுக்கொண்டு அஃது விபச்சாரத்தின் பக்கம் நம் மனதை நாட விடுவதில்லை. ஆனால் ஆணோ பெண்ணோ தம் மனம் உடன்பட்டு விபச்சாரம் புரிவதாக இருந்தால் அதற்கு மனசாட்சி ஆசையின் மிகுதியால் அதை குற்றம் காண்பதில்லை. மேலும் இதை சமுக குற்றமாக பார்க்காமல் இருவரும் உடன்பட்டு தானே செய்கிறோம் என ஆறுதல் கூறி மேலும் இத்தகாத செயலை மனசாட்சி நியாயப்படுத்தவே செய்கிறது.
 ஆக சிந்தனை மாறுபாடும் சுயநலமிக்க எண்ண வெளிபாடும் மனசாட்சி அதன் உண்மை நிலைக்கு புறம்பாக அல்லது எதிராக முடிவெடுப்பதை தவறாக காணாது.
   கொலை, கொள்ளை மற்றும் வன்முறை போன்றவைகள் யாவும் பொதுவாக எல்லோராலும் சமுக சீர்கேடுகளாக கருதப்பட்டாலும் அச்செயல்கள் தவறென்று மிக நன்றாக தெரிந்தும் அத்தகைய தீய செயல்களை செய்யக்கூடியவர்கள்., அவர்களின் மனசாட்சிக்கு உடன்பட்டு தான் செய்கிறார்கள் என்பது தெளிவு. அஃது அவர்களின் மனநிலையும் இச்செயல்பாடுகளுக்கு அவர்கள் இயங்கும் சமுக பிண்ணனியே குற்றம்சாற்றி தமது தவறான போக்கிற்கு நியாயத்தை கற்பிக்கிறது. ஆக அங்கு மனசாட்சியின் நடு நிலை செயல்பாடு பொய்தே போய்விடுகிறது. 
  சுய தேவையின் அடிப்படையில் மாற்றமடையும் எண்ணங்களும் சமுக சூழ்நிலைகளின் குறுக்கீடும் மனசாட்சியின் செயல் திறத்தை மாற்றவல்ல ஆயுதமாகும். எனவே  மனசாட்சியால் நன்மையான காரியங்களை மட்டுமோ அல்லது உண்மையை அடிப்படையாக செயல்களை மட்டுமோ எல்லா நிலையிலும் செய்ய முடியாது. ஆக மனசாட்சிக்கு மட்டுமே கட்டுப்பட்டு 100 சதவீகித உண்மையான வாழ்வை எவராலும் மேற்கொள்ள முடியாது.
   அப்படியானால் நமது எண்ணத்திற்கு -தேவைக்கு -நேரத்திற்கு தகுந்தாற்போல் மாற்றமடையாத, எல்லா சமுக சூழலிலும் ஒரே நிலையில் செயல்பட, மனிதர்களுக்கு மனிதர் மாறுபடாத நீதமாக இருக்க மனசாட்சியை விட உயரிய சக்தி இருக்கிறதா....? உங்களுக்குள்ளேயே வினா எழுப்புங்கள் விடை தெரிந்தால் அதுவே நேர்வழிக்கு அழைத்து செல்லும் பாதையாகும்.
       
உங்களுக்குள்ளேயும் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன, (அவற்றை) நீங்கள் உற்று நோக்க வேண்டாமா ?   (51:21)

காதல் ஓர் இஸ்லாமியக் கண்ணோட்டம்

மேற்கத்திய கலாசாரம் ஈன்றெடுத்த குழந்தைகள்தான் இன்றைய காதலும் காதலர் தினங்களும் சீரழிந்த இந்த மேற்கத்திய கலாசாரத்தின் வெளிப்பாடுகள்தான் இவைகள்.  இன்றைய இளவல்களை கவர்ந்திழுக்கின்ற ஒரு காரணியாக நவீன காதல் அமைந்திருக்கின்றது.

தமது திருமண வாழ்வைத் தீர்மானிப்பதில் தம்மை தாலாட்டி சீராட்டி வளர்த்த தமது தாய் தந்தையரின் தலையீடுகள் சிறிதும் இன்றி முழுவதுமாக தமது சுயவிருப்பின் அடிப்படையிலேயே தமது திருமண வாழ்வை அமைத்துக் கொள்ள விரும்புகின்றது இன்றைய இளைஞர் சமுதாயம்.
 
தற்போதைய சூழற்காரணிகளும் அதற்கு ஏதுவாக அமைந்திருக்கின்றது. அந்நிய ஆண்களும் பெண்களும் தனிமையில் சந்தித்துக் கொள்வதற்கான வாய்ப்புக்களும் கலந்து பழகுவதற்கான வாய்ப்புக்களும் தாராளமாகவே காணப்படுகின்றன.

பாடசாலைகள் பல்கலைக்கழகங்கள் தனியார் கல்விநிலையங்கள் அலுவலகங்கள் மற்றும் பூங்காக்கள் போன்றவற்றில் அந்நிய ஆண்களும் பெண்களும் எந்தவிதமான தடங்கல்களுமின்றி கலந்து பழகுகின்றனர். பழக்கம் தொடர்ந்து  கடைசியில் தம்மை ஈன்றெடுத்த தாய் தந்தையருக்கு தெரியாமலேயே அல்லது அவர்களது விருப்பத்திற்கு மாற்றமாக திருமணம் நடந்தேறுகிறது.

தற்போதைய தகவற் தொழிநுட்ப யுகத்தில் இன்றைய காதலையும் காதல் திருமணங்களையும் ஊக்குவிப்பதில் இணையங்களும் (internet) சினிமாக்களும் பெரும் பங்கு வகிக்கின்றன.
 
இந்த காதல் திருமணங்கள் ஆற அமர நிதானமாக சிந்தித்து நடப்பவை அல்ல. மாறாக உணர்வுகளின் உந்துதல்களால் நடைபெறுபவை ஆகும். இவ்வாறு நடந்தேறிய திருமணங்கள் சில மாதங்கள் சில வருடங்கள் சந்தோஷமாக கழிகின்றன‌. பின்னர் கோலங்கள் கலைந்து வாழ்வின் யதார்த்தங்கள் புரிகையில் இவர்களால் அதற்கு முகம் கொடுக்க முடிவதில்லை. பரஸ்பரம் விட்டுக் கொடுத்தல் என்கின்ற தன்மைகள் அஸ்த்தமித்து அற்பப்பிரச்சினைகளும் சுனாமியாய் உருவெடுக்கின்றன.

உறவுகள் சீர்குலைந்து காதல் கசந்து விருப்புக்கள் வெறுப்பாய் மாறி பூகம்பமாய் வெடிக்கின்றது. நிறைகள் அஸ்த்தமனமடைந்து குறைகள் உதயமாகி குறைகளே பூதாகரமாக காட்சியளிக்கத் தொடங்குகின்றன. கடைசியில் இது விவாகரத்தில் சென்று முடிகின்றது.
 
அண்மைக்கால பத்திரிகைச் செய்திகளும் ஆய்வறிக்கைகளும் உணர்த்தி நிற்கின்ற ஒரு விடயம் விவாகரத்தில் அதிகளவு இடத்தைப் பிடித்திருப்பதும் தற்போதைய திருமணங்களில் மிகக் குறைந்த ஆயுளை கொண்டதுமான திருமணங்கள்  தற்போதைய காதல் திருமணங்களேயாகும்.

மேலும் தமிழ் சினிமாக்களில் சித்தரிக்கப்படுவது போன்று தற்போதைய காதலானது தெய்வீகத் தன்மை வாய்ந்ததாயின் அதில் துளியளவு கூட ஏமாற்றம் தோல்வி துரோகம்  என்பன இருக்கக் கூடாது. எனவே இன்றைய இந்த காதல் திருமணங்கள் தெய்வீகத் தன்மை வாய்ந்தது புனிதமானது என்ற வாதங்கள் போலித்தனமானவையாகும்.
இன்றைய காதலால் அதிகம் பாதிப்புக்குள்ளாவது பெண்கள்தான். தாய் தந்தையரையும் ஏனைய உறவுகளையும் துறந்து ஆரம்பிக்கின்ற இந்த வாழ்வில்  காதலனால் கைவிடப்படுகின்ற சந்தர்ப்பத்தில் ஆதரிப்போரின்றி தவிக்கின்றனர். இதற்கு தீர்வாக பலர் தற்கொலையை கையிலெடுத்து நிரந்தர நரகத்தை நோக்கி பயணிக்கின்றனர். தற்கொலை தொடர்பாக நபிகளாரின் பொன்மொழி பின்வருமாறு எடுத்தியம்புகின்றது.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘யார் மலையின் மீதிருந்து கீழே  குதித்து தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் என்றென்றும் குதித்துக் கொண்டேயிருப்பார். யார் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் நரகத்திலும் நிரந்தரமாக விஷத்தைக் கையில் வைத்துக் கொண்டு குடித்துக் கொண்டேயிருப்பார். யார் கூறிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவ்வாயுதம் தமத கையில் இருக்கும் நிலையில் நரகத்தில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் குத்திக் கொண்டேயிருப்பார்.’
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி)
நூல்: புஹாரி 5778

இன்றைய காதல் சில நேரங்களில் தற்கொலைக்கும் வழிவகுத்து எம்மை நிரந்தர நரகவாதியாகவும் ஆக்கி விடுகிறது. மேலும் அந்நிய ஆண்களும்  பெண்களும் நெருங்கிப் பழகுவதை மார்க்கம் வன்மையாக கண்டிக்கின்றது.
கள்ளக்காதல் கொள்வதையும் இஸ்லாம் தடை செய்கிறது. ஏக நாயன் அருள் மறையாம் திருமறையில் எடுத்தியம்புவதைப் பாருங்கள்.

‘உங்களில் எவருக்குச் சுதந்திரமுள்ள முஃமினான பெண்களை விவாகம் செய்து கொள்ள சக்தியில்லையோ அவர்கள் முஃமினான அடிமைப்பெண்களிலிருந்து உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட பெண்களை (மணமுடித்துக் கொள்ளலாம்;)  அல்லாஹ் உங்கள் ஈமானை நன்கு அறிகிறவன். உங்களில் சிலர் சிலரைச் சேர்ந்தவர்கள்; ஆகவே முஃமினான அடிமைப்பெண்களை அவர்களின் எஜமானர்களின் அனுமதி கொண்டு மணமுடித்துக் கொள்ளுங்கள் – அவர்களுக்குரிய (மஹர்) தொகையை முறைப்படிக் கொடுத்து விடுங்கள்; அப்பெண்கள் பரிசுத்தமானவர்களாகவும் விபச்சாரம் செய்யாதவர்களாகவும் கள்ளக் காதல் கொள்ளாதவர்களாகவும் இருக்க வேண்டும். எனவே அப்பெண்கள் முறைப்படி திருமணம் முடிக்கப்பட்டபின் மானக்கேடாக நடந்து கொண்டால் விவாகம் செய்யப்பட்ட சுதந்திரமான பெண்கள் மீது விதிக்கப்படும் தண்டனையில் பாதியே அப்பெண்களுக்கு விதிக்கப்பெறும்;  தவிர உங்களில் எவர் தன்னால் பாவம் ஏற்பட்டுவிடும் என்று (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறாரோ – அவருக்குத்தான் இந்த சட்டம். எனினும் நீங்கள் பொறுமையாக இருப்பது உங்களுக்கு மிகவும் நல்லதாகும்; இன்னும் அல்லாஹ் மன்னிப்போனாகவும்இ மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான் ‘.  (அல்குர்ஆன் 4:25)
மேலுள்ள அருள் மறை வசனம் திருட்டுத் தனமாக காதல் கொள்வதை தடைசெய்கிறது.
 
திருமணத்திற்கு முன் ஓர் ஆண் பெண்ணைத் திருமணம் செய்ய விரும்புவது அல்லது ஓர் பெண் ஆணைத் திருமணம் செய்ய விரும்புவதுதான் காதல் என்று சொன்னால் அதனை இஸ்லாம் தாராளமாக அனுமதிக்கின்றது. மாறாக இன்றைய காலகட்டத்தில் காதலின் பெயரால் இடம்பெறுகின்ற வரம்பு மீறிய செயற்பாடுகளைத்தான் தடை செய்கின்றது.

மேலும் திருமணம் செய்ய விரும்புகின்ற பெண்ணை நேரில் நன்கு பார்த்து நாம் எதிர்பார்க்கும்  விடயங்கள் பண்புகள் அவளிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் இஸ்லாமிய மார்க்கம் வலியுறுத்துகின்றது. இது தொடர்பாக நபிகளாரின் பொன்மொழிகள் பின்வருமாறு எடுத்தியம்புகின்றன.
 
‘நான் நபி (ஸல்) அவர்களுடன் வீட்டிலிருந்த போது ஒருவர் வந்து தான் அன்சாரி பெண்ணொருத்தியை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறினார். அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணை நீங்கள் பார்த்தீர்களா?  எனக் கேட்டார்கள். அதற்கு அவர் இல்லை நாயகமே! நான் அவளைப் பார்க்கவில்லை என்றார். அப்படியானால் முதலில் அவளைப் பார்த்துக் கொள்ளுங்கள். மதீனாவாசிகளின் கண்களில் சிறிது கோளாறு இருக்கின்றது என்றார்கள் ‘.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி)
நூல்: முஸ்லிம்

‘நான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளத் தூதனுப்பினேன். இதனைக் கேள்வியுற்ற நபி (ஸல்) அவர்கள் நீங்கள் பெண்ணைப் பார்த்தீர்களா? என வினவினார்கள். இல்லை என்றேன். அவ்வாறாயின் அப்பெண்ணை பார்த்துக் கொள்ளுங்கள். இம்முறையைக் கையாள்வதால் உங்களுக்கிடையில் நட்பும் நல்லிணக்கமும் ஏற்பட வழிபிறக்கும் எனக்கூறினார்கள்.
அறிவிப்பவர்: முகீரா பின் ஹுஃபா(ரழி)
நூல்: திர்மிதீ நஸயீ

மேற்படி நபிமொழிகளில் இருந்து ஒருவர் திருமணம் செய்வதாக இருந்தால் கட்டாயம் பெண்ணைப் பார்த்துக்கொள்ள வேண்டுமென்பதை அறியலாம். மேலும் திருமணம் செய்து கொடுக்கப்படுவதாக இருந்தால் கட்டாயம் பெண்ணின் விருப்பம் கேட்கப்பட வேண்டும்.

‘பெண்ணின் சம்மதமின்றி செய்யப்பட்ட திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் இரத்து செய்துவிட்டார்கள் ‘
ஆதாரம்: ஸஹீஹுல் புஹாரி 5136/ 6968/ 6970
அதே வேளை பெண்ணைப் பொறுத்த வரையில் விரும்பிய ஆண்மகனை தானாக திருமணம் செய்ய முடியாது. மாறாக பொறுப்பாளரே விரும்பிய ஆண்மகனுக்கு திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என இஸ்லாம் பணிக்கின்றது.
இவ்வாறு செய்கின்ற போது பெண்கள் ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றப்படுவதிலிருந்து பாதுகாக்கப்படுகின்றார்கள். இதனால் பெண்ணுடைய வாழ்வுக்கு உரிய உத்தரவாதம் வழங்கப்படுகிறது.
அதே சமயம் பெண் ஒருவனை விரும்புகின்ற போது அவன் இஸ்லாமிய அடிப்படையில் சீதனமின்றி மஹர் கொடுத்து திருமணம் முடிக்க முன்வருகின்ற போது பெற்றோர் பெண்ணின் உணர்வினை மதித்து அவளது விருப்பப்படி திருமணம் செய்து கொடுக்க முன் வர வேண்டும்
மேலும் திருமணம் செய்து கொள்வதற்காக ஒருவரை ஒருவர் விரும்புகின்ற போது விரும்புபவரும் விரும்பப்படுபவரும் முஸ்லிமாக இருத்தல் வேண்டும். முஸ்லிம்கள்  முஸ்லிமல்லாதோரை திருமணம் செய்வதை இஸ்லாம் தடைசெய்கின்றது. முஸ்லிமும் முஸ்லிமல்லாதோரும் விரும்புகின்றபோது முஸ்லிமல்லாதோர் இஸ்லாத்தை ஏற்றதன் பிற்பாடு திருமணம் செய்து கொள்ள முடியும்.

ஏக நாயன் அருள் மறையாம் திருமறையில் எடுத்தியம்புவதைப் பாருங்கள்.
“(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை -அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்;  இணை வைக்கும் ஒரு பெண்  உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும் அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள் ஆவாள்;. அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்;  இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும் ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள் உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள்; ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும் மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்; மனிதர்கள் படிப்பினை பெறுவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான். (அல்குர்ஆன் 2:221)

அதே சமயம் ஒரு ஆணோ பெண்ணோ விரும்புகின்ற வாழ்க்கை மார்க்கத்திற்கு முரணில்லாத வகையில் காணப்படும் போது அதனைத் தடுப்பது குற்றமாகும்.
 
எனவே அல்லாஹ்வும் அவனது தூதரும் கற்றுத்தந்த வகையில் எமது வாழ்வை அமைத்து ஈருலகிலும் ஏகநாயனின் திருப்தியையும் மன்னிப்பையும் பெறுவோமாக!

அமைதியான உள்ளம்!

உலகத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். நபி (ஸல்) அவர்கள் மீதும் நபித்தோழர்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சமாதனமும் உண்டாவதாக!

இஸ்லாமிய சமூகம் நடைமுறை வாழ்விலும் வணக்க வழிபாடுகளிலும் கொள்கைக் கோட்பாட்டிலும் தூய்மையானதாக தனித்து விளங்குகின்றது. நபி (ஸல்) அவர்கள் உள்ளத்தை அமைதியின்மையாக்கக் கூடிய்வற்றை விட்டும் பிரிவினையையும் கோபத்தையும் உருவாக்காக் கூடியவற்றை விட்டும் தடுத்திருக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“நீங்கள் ஒருவருக்கொருவர்  கோபித்துக் கொள்ள வேண்டாம்; பொறாமை கொள்ள வேண்டாம்; உறவினரை துண்டித்து நடக்க வேண்டாம்; தீமையின்பால் அலோசனை செய்து கொள்ள வேண்டாம், அல்லாஹ்வை வழிப்படக்கூடிய சகோதரர்களாக இருந்து கொள்ளுங்கள். ஒரு முஸ்லிம் தனது சகோதரனுடன் மூன்றி நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது ஹராமாகும்” (ஆதாரம்: முஸ்லிம்)

மக்களுக்கு மத்தியில் அன்பையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தக்கூடிய விடயங்களை ஏவியிருக்கின்றார்கள்.

“என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது சத்தியமாக நீங்கள் விசுவாசம் கொள்ளும் வரை சுவர்க்கம் நுழைமாட்டீர்கள்; மேலும் ஒருவருகொருவர் விரும்பிக் கொள்ளாதவரை விசுவாசம் கொள்ள மாட்டீர்கள்” (ஆதாரம்: முஸ்லிம்)

“நபி (ஸல்) அவர்களிடத்தில் மனிதர்களில் சிறந்தவர் யார்? என்று வினவப்பட்டார். தனது உள்ளத்தில் இருப்பவற்றை அகற்றுபவனும் உண்மை பேசுபவனும் ஆவான் என்றார்கள். அதற்கு நபித்தோழர்கள், ‘உண்மை பேசுபவனை நாம் அறிவோம்; உள்ளத்தில் இருப்பவற்றை அகற்றுபவன் என்றால் யார்?’ என்று கேட்டார்கள். (அதற்கு நபி {ஸல்} அவர்கள்) ‘உள்ளத்தில் இருப்பதை அகற்றுபவர் என்பது இறையச்சமுள்ள பிறருடைய குறைகளை கூறுவதை விட்டும் தூய்மையாக இருப்பவன் ஆவான்; அவனிடம் எந்த பாவமும் கோபமும் குரோதமும் பொறாமையும் இருக்காது.” (ஆதாரம்: இப்னு மாஜா)

அமைதியான உள்ளம் என்பது அல்லாஹ்வின் அளப்பரிய அருட்கொடைகளிலிருந்தும் உள்ளவையாகும். சுவர்க்கவாசிகள் சுவர்க்கம் நுழையும் போது அவர்களுக்கு கொடுக்கப்படக் கூடியவையும் ஆகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:

“அவர்களின் உள்ளங்களிலிருந்து குரோதத்தை நாம் நீக்கிவிடுவோம். அவர்கள் சகோதரர்களாக கட்டில்களின் மீது ஒருவரை ஒருவர் முன்னோக்கியிருப்பர்.” (அல்குர் ஆன் 15:47)

அமைதியான உள்ளமுடையவர்கள் உலகிலேயே நிம்மதியாக வாழ்வார்கள். மறுமையில் அதனை கனீமத்தாக பொற்றுக் கொள்வார்கள்  சுவர்கம் நுழைவதற்கு காரணியாகவும் அமையும்.
இப்னு ஹஸம் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

“சிலர் தப்பான எண்ணங்களை வைத்துக் கொண்டு கஷ்டப்பட்டு தீய விஷயங்களில் ஈடுபடுகின்றனர். இதனால் பெரும் பாவங்களை செய்கின்றனர். மறுமையில் நரகிலும் நுழைய கிற்கு வழிகோலுகின்றனர். இதனால் எந்தவித தப்பும் செய்யாத பெரியவர்களையும் சிறியவர்களையும் அழிக்கின்றனர். அவர்களுக்கு சோதனைகளையும் ஏற்படுத்துகின்றனர். இத்தகையவர்கள் இதன் மூலம் தனக்கு எந்த நன்மையும் இல்லை என்பதை அறிந்தால் இத்தகைய தீய செயல்களில் ஈடுபட மாட்டார்கள். இவர்கள் தங்களது எண்ணத்தை தூய்மைப்படுத்தி தீயவற்றை விட்டுவிட்டு நல்ல விஷயங்களை முற்படுத்தி செய்தால் சந்தோஷமானவர்களாக இவ்வுலகில் வாழ்வார்கள்; மறுமையில் சுவர்கத்துக்கும் நுழைவார்கள். ”                          

தற்காலத்தில் அதிகமானவர்கள் தீய விஷயங்களை பார்ப்பதை விட்டும், ஹராமானவற்றை சாப்பிடுவதை விட்டும் பேணுதலாக இருக்கின்றனர். ஆனாலும் தனது உள்ளத்தினால் பிறரை பொறாமை, மனக்கோபம் போன்றவற்றில் பராமுகமாக இருக்கின்றனர். நான்கு விஷயங்களை நாம் பேணிக்கொள்ள வேண்டும். மனிதனது கண்ணினால் ஆகுமானவற்றை மாத்திரம் பார்வையிட வேண்டும், உள்ளத்தில் பிறரைப் பற்றி பொறாமை,  கோபம் இருக்கின்றதா என்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும், மனோ இச்சைக்கு கட்டுப்பட்டு தீய விஷயங்களை செய்வதனை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும். இத்தகைய நான்கும் ஒருவரிடத்தில் இருந்தால் நிச்சயமாக அவர் அமைதியான உள்ளம் கொண்டவராவார்.                             

அமைதியான உள்ளம் கொண்டவர் சுவர்க்கம் நுழைவதற்குரிய காரணிகளுடையவராவர். அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“நாம் நபி (ஸல்) அவர்களுடன் இருக்கின்ற போது  நபி (ஸல்) அவர்கள் தற்போது சுவர்க்கவாசிகளில் ஒருவர் உங்களிடத்தில் வருவார்கள் என்று கூறினார்கள். அப்போது அன்ஸாரிகளில் ஒருவர் வுழூ செய்ததன் பின்னர் தனது தாடியினால் தண்ணீர் வடிகின்ற நிலையில் இடது கையில் தனது பாதணிகளை தூக்கிய நிலமையில் வந்தார். இரண்டாவது நாளும் முதலாம் நாள் கூறியதைப் போன்றே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதே மனிதர் அவ்வாறே  வந்தார். முன்றாவது நாளும் நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது நாள் கூறியதை போன்றே கூறினார்கள். அதே மனிதர் முன்றாவது நாளும் அதே நிலையில் வந்தார். பின்னர் நபி (ஸல்) அவர்கள் சென்றபோது அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் (ரழி) அவர்கள் அந்த மனிதரை பின்தொடர்ந்து சென்று அவருடைய நிலவரத்தை அறிய அவரிடம் மூன்று நாட்கள் தங்குவதற்கு அனுமதி கோரினார். அதற்கவர் அனுமதி வழங்கினார்கள்.

அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் (ரழி) அவர்கள் கூறியதாக அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்: மூன்று நாட்களும் அவர் இரவில் நின்று வணங்கவில்லை; ஆனால் இரவில் படுக்கைக்கு செல்கின்றபோது அல்லாஹ்வை நினைவு கூர்வார்கள்; துஆவை ஓதுவார்கள்; பின்னர் அல்லாஹு அக்பர் என்று கூறுவார்கள்; பின்னர் பஜ்ரு வரையும் தூங்குவார்கள். பிறரைப் பற்றி நல்லவற்றையே கூறுவார்கள்; மூன்று நாட்களும் இவ்வாறே நாம் அவரை அவதானித்தேன். இதன் பின்னர் அவரின் நல்லமல்களை குறைவாக மதிப்பிட எனக்கு நேரிட்டது. அப்துல்லாஹ் இப்னி அம்ரு இப்னு ஆஸ் (ரழி) அவர்கள் அந்த மனிதரை பார்த்து, ‘நபி (ஸல்) அவர்கள் எம்மைப் பார்த்து சுவர்க்கவாசிகளில் ஒருவர் வருவார் என்று கூறினார்கள்; மூன்று முறையும் நீங்களே வந்தீர்கள். இதனால் நீங்கள் விஷேஷமாக எந்த நல்லமலை செய்ய வேண்டும் என்பதனை பார்க்கவே நான் உங்களிடத்தில் தங்கினேன். ஆனாலும் எந்தவித அமல்களையும் அதிகமாக நீங்கள் செய்ததாக காணவில்லை’ என்று கூறிவிட்டு அவ்வாறு ‘நபி (ஸல்) அவர்கள் உங்களை சுவர்க்கவாசி என்று கூறுவதற்கு காரணம் என்னவென்று’ அவரிடம் வினவினார். அதற்கு அம்மனிதர் கூறினார், “நான் எந்த முஸ்லிமுக்கும் தீங்கிழைக்கவும், மோசடி செய்யவும் மாட்டேன். அவ்வாறே என்னைவிட எவரையெல்லாம் அல்லாஹ் உயர்த்தி நல்லவற்றை கொடுத்திருக்கின்றானோ அவற்றில் நான் பொறாமை கொள்ள மாட்டேன்.” என்று கூறினார்.

அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள், ‘இந்தவிஷயமே எம்மால் செய்ய முடியாத காரியமாகும். (ஹதீஸின் சுருக்கம்) (ஆதாரம் :அஹ்மத்)

கோபத்தையும், குரோதத்தையும் உருவாக்கக்கூடிய காரணிகள்:
1) ஷைத்தானுக்கு வழிப்படல்:

அல்லாஹ் கூறுகின்றான்:
“மிக நல்லதையே பேசுமாறு எனது அடியார்களுக்கு (நபியே!) நீர் கூறுவீராக! நிச்சயமாக ஷைத்தான் அவர்களுக்கிடையில் பகைமையை உண்டு பன்னுவான். ஷைத்தான் மனிதனுக்கு பகிரங்க விரோதியாகவே இருக்கின்றான்” (அல்குர் ஆன் 17:53)
மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“அரேபியத் தீபகற்பத்தில் அல்லாஹ்வை வழிப்படுகின்றவர்களை தடுப்பதற்கு ஷைத்தானுக்கு முடியாது; ஆனாலும் அவர்களுக்கு மத்தியில் கோபத்தையும் குரோதத்தையும் ஏற்படுத்துகின்றான்” (ஆதாரம்: முஸ்லிம்)

2) கோபம்:
அனைத்து தீமைகளின் திறவுகோல் கோபமாகும். நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதருக்கு கோபத்தை விட்டும் தூரமாகுமாறு வஸிய்யத் செய்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“நீங்கள் கோபிக்க வேண்டாம்; அம்மனிதரோ எனக்கு நல்லுபதேசம் செய்யுங்கள் என்று மீண்டும் மீண்டும் வினவினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘நீங்கள் கோபிக்க வேண்டாம்’ என்று பதிலளித்தார்கள்”
கோபம் ஒருவனை பரிகசிப்பதற்கும், நோவினை செய்வதர்கும், அழித்துவிடுவதற்கும் இட்டுச்செல்வதோடு, அனைத்து பிரிவுகளுக்கும் பிரிவினைகளுக்கும் முதன்மை காரணியாகவும் அமைகின்றது. 

3) கோள் கூறுவது:
இது குரோதத்தை உருவாக்குவதற்கு மிக முக்கிய காரணியாகும். இதனால் உறவுகள் துண்டிக்கப்படுகின்றன. மனிதர்களது உள்ளங்கள் பிளவுபடுகின்றன. அல்லாஹ் இவர்களைப் பற்றி இழிவாக அல்-குர்ஆனிலே சுட்டிக் காட்டுகின்றான்.
“(அவன்) குறை கூறி, கோள் சொல்லித்திரிபவன்” (அல்குர் ஆன் 68:11)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“கோள் கூறி திரிபவன் சுவர்க்கம் நுழையமாட்டான்”

4) பொறாமை:
இது ஒரு மனிதனுக்கு கொடுக்கப் பட்டிருக்கக்கூடிய அருட்கொடைகளை நீக்குவதற்கு மிக முக்கிய காரணியாகும். இதனால் ஒரு முஸ்லிம் துன்பப்படுவதற்கு நேரிடுகிடுகின்றது. இதனை அல்லாஹ்வும் அவனது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களும் தடுத்திருக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“பொறாமை கொள்வதை விட்டும் உங்களை எச்சரிக்கின்றேன்! நிச்சயமாக நெருப்பு எவ்வாறு விறகை எரிக்குமோ அதே போன்று பொறாமை நல்லமல்களை எரித்துவிடும்” (ஆதாரம்: அபூதாவூத்)
பொறாமை என்கின்ற இத்தீய செயல், ‘பிறரை குறைகூறுதல், கோள் சொல்லுதல், பிற முஸ்லிம்கள் மீது பலி சுமத்துதல், பிறருக்கு அநியாயம் செய்தல், பெருமையடித்தல்’ போன்ற பெரும் பாவங்களுக்கு வழிவகுக்கும்.                                                                   

5) உலக விவகாரத்தில் போட்டி போட்டுக்கொள்ளுதல்:
குறிப்பாக இக்காலத்தில் இந்த விஷயம் அதிகரித்து விட்டது. மக்களது உள்ளங்கள் பிளவுபட்டு விட்டன. ஒருவன் தனது சகோதரனாகிய மற்றவரைப் பார்த்து பொறாமை கொள்கின்றான். ஏனொனில் அவனை விட இவன் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பதாலும், பொருளாதாரத்தில் மிக வசதியாக இருப்பதாலுமே. இவ்வாறு ஆண்களும், பெண்களுமாக மற்றவர்கள் முன்னேறுவதை தீய நோக்கோடுப் பார்த்து அவர்களை விட்டும் உலக விவகாரத்தில் முந்தியடிக்க போட்டிபோட்டுக் கொள்கின்றனர்.
                
6) உயர் பதவிகளையும், பிரபல்யம் அடைவதையும் விரும்புவது:

இது மிக மோசமான பழக்கமாகும். புழைல் இப்னு இயால் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
“எவனொருவன் உயர் பதவிகளை விரும்புகின்றானோ அவன் பிறர் மீது பொறாமை கொள்வான், அவர்களுடன் மோஷசமான முறையில் நடந்து கொள்வதோடு குறைகளை ஆராய்பவனாக மாறிவிடுகின்றான்.”
இந்த நிகழ்வை வேலை செய்பவர்களுக்கு மத்தியில் அதிகமாக அவதானிக்கலாம்”                                     

7) அதிகம் பரிகசித்தல்:

அதிகம் பரிகசிப்பதால் மனிதனை கோபத்தின் பால் இட்டுச் செல்லும்; அது அவனை அசிங்கமான நிலையை அடையச் செய்யும். உணவுக்கு எவ்வாறு அளவோடு உப்பு அவசியமோ அதே போன்று பரிகாசம் குறைவாக அளவோடு இருக்க வேண்டும். எவ்வாறு ஒரு உணவுக்கு உப்பு அதிகரித்தால் அந்த உணவை உண்ண முடியாதோ அதே போன்று தான் பரிகாசம் அதிகரித்தால் கோபமும், பிரிவினையும் தானாகவே வந்துவிடும்.                   
ஒரு முஸ்லிம் தனது உள்ளத்தை தூய்மைப் படுத்திக் கொள்வது அவசியமான விஷயமாகும். பொறாமை பொய் போன்றவற்றிலிருந்து விளகிக்கொள்ள வேண்டும்.

அமைதியான உள்ளத்தைப் பெறுவதற்கு  கடைபிடிக்க வேண்டிய சில விஷயங்களை பின்வருமாறு பார்ப்போம்.

அ) உளத்தூய்மை (இஹ்லாஸ்):

எவர் உளத்தூய்மையுடன் தனது செயல்பாட்டை அமைத்துக் கொள்கின்றாரோ அவர் எந்தவித மனக்கசப்பையும் பிறருடன் வைத்துக் கொள்ள மாட்டார்; அவர் பிறருக்கு நன்மையே செய்ய நாடுவார்; பிறருக்கு துன்பம் நேர்கின்ற போது கவலைப்படுவார், பிறருக்கு சந்தோசமான  நிகழ்வு ஏற்படுகின்ற போது மகிழ்ச்சியடைவார், அவைகள் உலக விவகாரமாக இருந்தாலும் மறுமையோடு சம்பந்தப்பட்ட விடயமாக இருந்தாலும் சரியே!                                                                                   

ஆ) இறைவனைப் பற்றிய பூரண திருப்தி:
இப்னு கைய்யும் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:
“பிறருக்கு மோசடி செய்வதனை விட்டும் குழப்பம் விளைவிப்பதை விட்டும் உள்ளத்தை தூய்மைப் படுத்திக் கொள்ள வேண்டும். எவர் ஈடேற்றமில்லாத உள்ளத்தோடு அல்லாஹ்வை சந்திக்கிறானோ நிச்சயமாக அல்லாஹ் அவனை தண்டிப்பான். இறைவனது திருப்பொருத்தமும் அவனது கோபமும் இருக்கின்ற நிலையில் அவனுக்கு ஈடேற்றமான உள்ளம் கிட்டாது. எந்தளவுக்கு இறைவனை பொருந்திக் கொள்கின்றானோ அந்தளவுக்கு உள அமையை பெற முடியும். மோசடியின் மூலம் உள அமைதியை பெற முடியாது! பிறருக்கு நன்மை செய்வதனாலும் நல்லுபதேசம் செய்வதனாலுமே உள அமைதியை   பெறமுடியும். ”                                                                                                               

இ) அல்-குர்ஆனை பொருள் விளங்கி ஓதுவது:
அல்-குர்ஆன் அனைத்து நோய்களினதும் நிவாரணியாகும்! அதனை பொருள் விளங்காமல் ஓதுபவர் நிச்சயாமாக நஷ்டவாளியே!

அல்லாஹ் கூறுகின்றான்:
இது (அல்-குர்ஆன்) நம்பிக்கை கொண்டோருக்கு நேர்வழியாகவும், நிவாரணியகவும் இருக்கும் என்று (நபியே!) நீர் கூறுவீராக…” (அல்-குர்ஆன் 41:44)
மேலும் கூறுகின்றான்:
“மேலும் நம்பிக்கையாளர்களுக்கு நிவாரணியாகவும் அருளாகவும் உள்ளவற்றையே இக்குர்ஆனில் நாம் இறக்கியுள்ளோம். அது அநியாயக்காரர்களுக்கு நஷ்டத்தை தவிர வேறெதையும் அதிககிக்காது” (அல்-குர்ஆன் 17:82)
அல்லாஹ் கூறுகின்றான்:
“மனிதர்களே! உங்கள் இரட்சகனிடமிருந்து உங்களுக்கு நல்லுபதேசமும் உள்ளங்களில் உள்ளவற்றிற்கு நிவாரணியாகவும் நம்பிக்கையாளர்களுக்கு நேர்வழியும், கருணையும் நிச்சயமாக வந்துவிடும்” (அல்-குர்ஆன் 10:57)
அல்-குர்ஆன் உடல்,  உள, இம்மை, மறுமை இவை அனைத்குக்குமே நிவாரணி ஆகும்.                                                                                                                                            

ஈ) தன்னைப் பற்றி தானே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்:
பிற சகோதரர்களுக்காக செய்த துன்பங்களையும் அநியாயங்களையும், பகைமையும் நினைவுபடுத்தி, பிறரைப் பற்றி பொறாமை கொண்டமை, கோள், புறம், மன வேதனையடையும் அளவுக்கு பரிகசித்தமை அனைத்தையும் நினைவு கூறி அவற்றிலிருந்து அமைதி பெற வேண்டும்.        

உ) பிரார்த்தனை:
ஒரு அடியான் தனக்கும் பிற சகோதரர்களுக்கும் உள அமைதியை வேண்டி அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும். அதுவே நல்லடியார்களது பண்பாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:
“அவர்களுக்குப்பின் குடியேறியவர்களுக்கும் (இதில் பங்குண்டு). அவர்கள் “எங்கள் இறைவனே! எங்களுக்கும், ஈமான் கொள்வதில் எங்களுக்கு முந்தியவர்களான எங்கள் சகோதரர்களுக்கும் மன்னிப்பு அருள்வாயாக, அன்றியும் ஈமான் கொண்டவர்களைப் பற்றி எங்களுடைய இதயங்களில் பகையை ஆக்காதிருப்பாயாக! எங்கள் இறைவனே! நிச்சயமாக நீ மிக்க இரக்கமுடையவன், கிருபை மிக்கவன்” என்றும் (பிரார்த்தித்துக்) கூறுவர்.” (அல்-குர்ஆன் 59:10)

ஊ) தர்மம் செய்தல்:
தர்மம் செய்வது மனிதனது உள்ளத்தை தூய்மைப்படுத்திவிடும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
“அவர்களை தூய்மைப்படுத்தும் (ஸகாத் எனும் கடமையை) தர்மத்தை அவர்களின் செல்வங்களிலிருந்த்து (நபியே!) நீர் எடுத்து, அதன் மூலம் அவர்களை பரிசுத்தப்படுத்துவீராக!…” (அல்-குர்ஆன் 09:103)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“தர்மத்தினால் உங்களது உள்ளங்களை குணப்படுத்திக் கொள்ளுங்கள்” (ஆதராம்: புகாரி)

மனிதன் குணப்படுத்த வேண்டிய நோய்களில் மிக குக்கியமானது உள நோயாகும், இவற்றில் மிக முக்கியமாக தங்களது உள்ளங்களை முதன் முதலில் சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.

எ) சகோதரர்களுக்கு எதிராக மோசமான வார்த்தைகளைப் பிரயோகிக்காமலும். அவர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தாமலும் இருப்பது:
                                                                                                                 
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமின் சகோதரனாவான்; இதன் மூலம் அவர்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்த வேண்டும். மாறாக, கிறிஸ்தவர்களையும் யூதர்களையும் எதிர்ப்ப்தைப் போன்று ஒரு முஸ்லிமாகிய சகோதரனை எதிர்க்கக் கூடாது.
அவ்வாறு செய்வதென்பது அவனுக்கு தீங்கிளைப்பதாகவே அமைகின்றது.                                                                            

ஏ) ஸலாத்தை பரப்புதல்:
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மீது சத்தியமாக.நீங்கள் விசுவாசம் கொள்ளும் வரை சுவர்க்கம் நுழைய மாட்டீர்கள். மேலும் நீங்கள் ஒருவரை ஒருவர் விரும்பிக் கொள்ளாத வரை விசுவாசம் கொள்ள மாட்டீர்கள். உங்களுக்கு மத்தியில் நற்பை ஏற்படுத்தக் கூடிய ஒன்றை சொல்லித் தரட்டுமா? என்று கூறிவிட்டு, ‘உங்களுக்கு மத்தியில் ஸலாத்தை பரப்பிக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)
இப்னு அப்தில் பர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: “இந்த நபிமொழி ஸலாத்தின் சிறப்பை தெளிவு படுத்துகின்றது. நற்பை ஏற்படுத்தக் கூடியவற்றை உருவாக்குகின்றது, கோபத்தை விட்டு தடுக்கின்றது.             

ஐ) அதிகம் கேள்வி கேட்பதை விட்டும், மனிதனது குறைகளை ஆராய்வதை விட்டும் தவிர்ந்து கொள்ளல்:
                                                                                           
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“தனக்கு தேவையில்லாத ஒன்றை விட்டும் தவிர்ந்து கொள்வதென்பது ஒரு சிறந்த இஸ்லாமியனின் நற்குணமாகும்” (ஆதாரம்: திர்மிதி)

ஒ) சக முஸ்லிம்களுக்கு நல்லவற்றையே விரும்பவேண்டும்:
                                                              
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“இறைவன் மீது ஆனையாக ‘ஒரு சதோதரர் தான் விருப்புவதையே தான் பிற சகோதரர்களுகளுக்கும் விரும்பாதவரை உண்மையான இறைவிசுவாசியாக மாட்டான்” (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

ஓ) தனது உள்ளம் ஈடேற்றமாகுவதற்காக வேண்டி கோள், புறம் கேட்பதை விட்டும் தவிர்ந்து கொள்ளல்:  
                                                                                                                                            
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“எனது தோழர்ளைப் பற்றி ஒருவரை ஒருவர் என்னிடம் சொல்ல வேண்டாம். நான் உங்ளுக்கு மத்தியில் ஈடேற்றம் உள்ளவனாக இருப்பதற்கு விரும்புகிறேன்” (ஆதாரம்: அஹ்மத்)
சமூதத்திலே ஒருவன் இன்னொருவனைப் பற்றி ஓரிரு வார்த்தைகளை பேசி இருப்பான்;  அதனை இருவர் அதற்கு மேற்பட்டவர்கள் பேசிக் கொள்ளும் போது பல விஷயங்களை சேர்த்து அல்லது குறைத்து தங்களது உள்ளங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்ற அளவுக்கு காரணியாக அமைகின்றது. இவை பெண்களுக்கு மத்தியிலும், கணவன் மனைவியர்களுக்கு மத்தியிலும், வீடுகளிலும் அதிகம் இடம் பெருவதனை அவதானிக்கலாம்.                                                                                  

ஓள) /உள்ளத்தை சீர்திருத்தி அதனை சரி செய்துகொள்ள வேண்டும்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“அறிந்து கொள்ளுங்கள் உள்ளத்திலே ஒரு சதைக் கட்டி இருக்கின்றது; அது சீர் பட்டுவிட்டால் முழு உடலும் சீர்பட்டுவிடும், அது சீர்கெட்டுவிட்டால் முழு உடலும் சீர்கெட்டுவிடும். அதுவே உள்ளமாகும்” (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

ஃ) இரண்டு பேருக்கு மத்தியில் நல்லிணக்கத்தை உருவாக்குதல்:
                                         
அல்லாஹ் கூறுகின்றான்:
“நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி உங்களுக்கிடையில் நிலைமையைச் சீர் படுத்திக் கொள்ளுங்கள்” (அல்-குர்ஆன் 08:01)

“நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“நோன்பையும், தொழுகையையும், தர்மத்தையும் விட சிறந்த அந்தஸ்தில் உள்ள ஒன்றை அறிவித்துத் தரட்டுமா? என்று கூறிய போது நபித்தோழர்கள், ‘ஆமாம்’ என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், ‘பிரிந்திருக்கின்றவர்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் என்றார்கள்” (ஆதாரம்: அபூதாவூத்)

இறைவா! எமது உள்ளத்தை முஸ்லிம்களுக்கு மத்தியில் எந்த வித கோபமும், குரோதமும், பிரச்சினையும் இல்லாத ஈடேற்றமான உள்ளமாக மாற்றுவாயாக!

நம் குடும்பத்தில் நிம்மதி தேவையா?

சகோதரர்களே! குடும்பம் அல்லாஹ்வுடைய மிகப்பெரும் அருட் கொடையாக உள்ளது ஆனால் நாம்தான் அதை மறந்து விடுகிறோம்.  நினைத்துப்பாருங்கள் குடும்பம் இல்லையெனில் நாம் அநாதைகள்தானே! நீங்கள் சொந்த நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ இருக்கலாம் எங்கிருந்தாலும் தொலைபேசி, கடிதம் வாயிலாக உங்களிடம் மிக நெருக்கமாக, ஆசை ஆசையாக பேசக்கூடிய நபர்கள் யார்? உங்கள் குடும்ப உறுப்பினர்கள்தானே! அப்படிப்பட்ட குடும்பத்தை நாம் எவ்வாறு பேணுவது? பெற்ற தாய் மற்றும் உடன் வாழும் மனைவி மக்கள் ஆகியோருக்கு இடையில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு தீர்வுதான் என்ன? அலசிப்பார்ப்போம்!


எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தியாக நடந்து கொள்கிறார்களோ அவர்கள் நற்பாக்கியம் பெற்றவர்கள். அல்குர்ஆன் 24:52
முதலில் மேற்கண்ட இந்த இறை வசனத்தை உள்ளத்தில் ஆழமாக பதித்துக்கொண்டால் குடும்பத்தில் சண்டை சச்சரவுகளுக்கு இடமே இல்லை காரணம் அனைத்து பிரச்சினைகளுக்கும் மூல காரணம் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கம் கீழ்படியாமைதான்! எந்த இடத்திலாவது அல்லாஹ் பெற்ற தாய், தந்தை, மனைவி, பிள்ளைகள், உறவுமுறைகள் ஆகியவற்றை முறித்துக்கொண்டு வாழ அறிவுறுத்தி யிருக்கிறானா? நம் ஆதிபிதா ஆதம் (அலை) மற்றும் ஹவ்வா (அலை) இருவரும் தவறு செய்தார்கள் அல்லாஹ் இருவருக்கும்தான் தண்டனை அளித்தான் இதில் ஆண் பெண் என்ற பாரபட்சம் பார்த்து தண்டனை அளிக்கவில்லையே!

பெற்றோரை பேணுதல்
 

பெற்றோரை பேணுமாறு அல்லாஹ் கூறும் அறிவுரை
நாம் மனிதனுக்கு, தன் பெற்றோர் இருவருக்கும் உபகாரம் செய்யவேண்டியது பற்றி உபதேசம் செய்தோம்”
(லுக்மான்: 14).
  இன்னும், நினைவுகூருங்கள். நாம் இஸ்ராஈல் மக்களிடத்தில், ‘அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் நீங்கள் வணங்கக் கூடாது. உங்கள் பெற்றோருக்கும் நன்மை செய்யுங்கள்’ என்று உறுதிமொழி வாங்கினோம்” (அல்-பகறா: 83).

தாய்க்கு முன்னுரிமை வழங்கிய மாநபி நாயகம் (ஸல்)
‘ஒரு தோழர், நபி (ஸல்) அவர்களின் அவைக்கு வந்து, ‘நான் சேவை செய்வதில் முதல் தகுதி யாருக்கு?’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘உமது தாய்’ என்றார்கள். ‘அதற்குகடுத்த தகுதி யாருக்கு?’ என்றார் அந்தத் தோழர். அதற்கும் நபி (ஸல்) அவர்கள், ‘உமது தாய்’ என்றார்கள். ‘அதற்கடுத்த தகுதி யாருக்கு?’ என மீண்டும் கேட்டார் வந்த தோழர். மூன்றாம் முறையாகவும் அதே பதிலையே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மறுபடியும் அத்தோழர், ‘அதற்கடுத்த தகுதி யாருக்கு?’ எனக் கேட்க அண்ணல் நபி (ஸல்) அவர்கள்,   ‘உமது தந்தை’ என்று பதிலளித்தார்கள். (நூல்: முஸ்லிம்)
  
தந்தைக்கு கண்ணியம் அளிக்க அறிவுறுத்திய அருமை நபி (ஸல்)
நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
எந்த மகனும் தன் தந்தைக்கு கைமாறு செய்ய முடியாது. அடிமையாக எந்தத் தந்தையாவது இருந்தால், அவரை விலைக்கு வாங்கி உரிமை வழங்கப்படும்.  நூல்: திர்மிதீ
  நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘தந்தையின் திருப்தியில் அல்லாஹ்வின் திருப்தியும், தந்தையின் அதிருப்தியில் அல்லாஹ்வின் அதிருப்தியும் உள்ளது’ அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரழி) நூல்: ஸஹீஹுல் ஜாமிஉ 3500, ஸில்ஸிலா ஸஹீஹா 516
  
பெற்ற தாய், தந்தையர் சுவனத்திற்கு உவமை!
முஆவியா(ரழி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து
” நான் போரில் கலந்து கொள்ள விரும்புகிறேன். அதுபற்றி உங்கள் ஆலோசனையைப் பெற வந்துள்ளேன்” என்று கூறினேன். “உனக்குத் தாய் இருக்கிறார்களா?” என்று நபி(ஸல்) கேட்டார்கள். நான் ‘ஆம்’ என்றேன். “நீ உன் தாய்க்கு சேவை செய். ஏனெனில், அவர்களின் பாதத்திற்குக் கீழே தான் சுவர்க்கம் உண்டு” என்று நபி(ஸல்) கூறினார்கள். (நூல்கள் : நஸயீ, தப்ரானி)
 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தந்தை சுவன வாயில்களில் மத்திய வாயில் ஆவார்.  அறிவிப்பவர்: அபுத் தர்தா (ரழி) நூல்: ஸஹீஹுத் தர்கீப் வத்தர்ஹீப்
 

மனைவியை பேணுதல்

“உலகம் அனைத்தும் இன்பமானது. அதில் தலைசிறந்த இன்பம் நற்குணமுள்ள மனைவி.”  (ஸஹீஹ் முஸ்லிம்)
 (நீங்கள் சேர்ந்து வாழக்கூடிய உங்கள்) மனைவிகளை, நீங்கள் அவர்களிடம் மனநிம்மதி பெறுவதற்காக உங்களிலிருந்தே அவன் படைத்து உங்களுக்கிடையில் அன்பையும் நேசத்தையும் உண்டுபண்ணியிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரக்கூடிய ஜனங்களுக்கு, இதிலும் (ஒன்றல்ல) நிச்சயமாக (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (அல்குர்அன் 30:21)

மூமினான மனைவியை வெறுக்காதீர்கள்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“எந்தவொரு முஃமினும் முஃமினான பெண்ணை வெறுக்கவேண்டாம். அவளிடம் ஒரு குணத்தை வெறுத்தால் மற்றொரு குணத்தை பொருந்திக்கொள்வார்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

நல்ல மனைவிக்கு அடையாளம்
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். “பெண்களில் மிகச் சிறந்தவர் யார்?” நபி (ஸல்) அவர்கள், “கணவன் அவளைப் பார்த்தால் மகிழ்விப்பாள். ஏவினால் அவனுக்கு கட்டுப்படுவாள். அவனது பொருளிலும் அவள் விஷயத்திலும் வெறுப்பூட்டும்படியான காரியங்களில் (ஈடுபட்டு) அவனுக்கு மாறுசெய்யமாட்டாள்” என்று கூறினார்கள். (முஸ்னத் அஹ்மத்)
  
மனைவியிடம் எவ்வாறு நடந்துக்கொள்வது! நபிமொழி!
பெண்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்! எனெனில் பெண் (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளாள். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல்பகுதியாகும். அதை நீ பலவந்தமாக நிமிர்த்திக்கொண்டே போனால் அதை நீ ஒடித்தே விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணலுள்ளதாகவே அது நீடிக்கும். ஆகவே, பெண்கள் விஷயத்தில் உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

மனைவியின் நியாயமான உரிமையை பரிக்காதீர்கள்!
அறிந்து கொள்ளுங்கள்! உங்களுக்கு உங்கள் மனைவியர்மீது சில உரிமைகள் உள்ளன. உங்கள் மனைவியருக்கு உங்கள்மீது சில உரிமைகள் உள்ளன. அவர்கள் மீதான உங்கள் உரிமையாகிறது உங்களுக்கு வெறுப்பானவர் எவரையும் உங்களது படுக்கையை மிதிக்க அனுமதிக்காமல் இருப்பதும், உங்களுக்கு வெறுப்பானவர்களை உங்கள் வீட்டினுள் அனுமதிக்காமல் இருப்பதுமாகும். அறிந்து கொள்ளுங்கள்! உங்கள் மீதான அவர்களுடைய உரிமையாகிறது, ஆடையிலும் உணவிலும் நீங்கள் அவர்களுக்கு அழகிய முறையில் நடந்து கொள்வதாகும்.” (ஸுனனுத் திர்மிதி)

நீங்கள் சிறந்தவரா? சுய பரிசோதனை செய்து பாருங்கள்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “முஃமின்களில் ஈமானால் பரிபூரணமானவர் அவர்களில் மிக அழகிய குணமுடையவரே. உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடத்தில் சிறந்தவரே.” (ஸுனனுத் திர்மிதி)


பெற்றோர் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்படும் பிரச்சினைகளை தீர்ப்பது எவ்வாறு?

·                    பெற்ற தாய் சொல்வதை கேட்டு மனைவியை விரட்டாதீர்கள், 
 
உங்களுக்கு இல்லற சுகம் தருவதற்காக சொந்த ரத்த பந்தங்களை விட்டுப் பிரிந்து வந்த மனைவியின் சொல்லைக் கேட்டு பெற்றோரை விரட்டாதீர்கள்! 
 
முதலில் நீங்கள் யார் என்பதை அறிந்துக் கொள்ளுங்கள் இதோ உங்களுக்கு ஒரு உவமையை தருகிறேன்!
 
நீங்கள் ஒரு நாட்டின் அரசனாக இருக்கிறீர்கள், உங்கள் நாட்டின் நிதி நிர்வாகத்தை சீர்படுத்த ஒரு மந்திரியும், எதிரிகளிடமிருந்து தற்காக்க ஒரு படைத்தளபதியும் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம், இப்போது படைத்தளபதியும் மந்திரியும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு உங்களிடம் நீதி கேட்டு வந்தால் நீங்கள் சமாதானம் செய்வீர்களா அல்லது மந்திரிக்காக படைத்தளபதியையும், படைத்தளபதிக்காக மந்திரியையும் இழப் பீர்களா?
 
இரண்டில் எந்த ஒன்றை இழந்தாலும் உங்கள் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் கேடாக அமையுமே தவிர உங்களுக்கு நல்ல தீர்வாக அமையாது!
 
இப்போது உங்கள் குடும்பத்தை ஒரு சுநத்திர நாடாகவும் உங்களை ஒரு அரசனாகவும், உங்கள் பெற்றோரை படைத் தளபதியாகவும்! உங்கள் மனைவியை நிதி மந்திரியாகவும் பாவித்துப்பாருங்கள் இரண்டில் ஒன்றை இழந்து குடும்பத்தில் பிரச்சினை வந்தால் பரிதவிப்பது உங்கள் பிஞ்சுக் குழந்தைகளும், உடன்பிறந்தவர்களுமே! அவர்கள் என்ன பாவம் செய்தார்கள்! 
 
இல்லற சுகத்திற்காக மனைவியிடம் அடிமையாகவோ, அன்பிற்காக பெற்றோரிடம் அடிமையாகவோ இருக்காதீர்கள் இதற்கு மாறாக அல்லாஹ்வுக்கு அடிமையாக இருந்து குடும்பத்தில் நீதியை நிலைநாட்டக்கூடிய குடும்ப தலைவான ஒரு மாபெரும் அரசனாக வாழுங்கள் அல்லாஹ் நாடினால் நிம்மதி உங்களைத் தேடிவரும்!
 
மனைவியோ, பெற்றோரோ உடன் பிறந்தவர்களோ, பிள்ளைகளோ உங்களின் உரிமையை பரிக்க முற்பட்டால் நீங்கள்தான் முட்டாளாக ஆக்கப்படுகிறீர்கள் என்றுதான் அர்த்தம்!
 
தாயை பார்க்க வேண்டாம் என்று மனைவி கூறினாலும்! மனைவியை பார்க்க வேண்டாம் விட்டுவிடு என்று பெற்றோர் கூறினாலும் கீழ்கண்ட வார்த்தையை பயன்படுத்துங்கள்! விழிப்புடன் இருங்கள்!

”நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்!
அவனுக்கும் அவனது தூதருக்கும் கட்டுப்படுகிறேன்!
மறுமையில் என் தவறுக்கு நானே பதில் கூற வேண்டும் நீங்கள் அல்ல!
 
எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தியாக நடந்து கொள்கிறார்களோ அவர்கள் நற்பாக்கியம் பெற்றவர்கள். அல்குர்ஆன் 24:52


 
 நம் அனைவருக்கும் நல் குடும்பத்தை வழங்கி அல்லாஹ் நல்லருள் புரிவானாக!

அல்ஹம்துலில்லாஹ்

(0ur Parents) பெற்றோரை பேணி நடப்போம் மறுமையை வெற்றிக் கொள்வோம்

இன்றைய கால கட்டங்களில் நாம் சாலையோரம் அன்றாடம் பார்க்கும் ஒரு வாடிக்கையான காட்சி முதியோர்கள் முருங்கைக்காயை விற்கும் நிலை. முதியோர்கள் பிறரிடம் கையேந்தி நிற்கும் நிலை. முதியோர்கள் கவனிப்பாரற்று தெருவில் கிடக்கும் நிலை. ஏன் இந்தநிலை? அவர்கள் பெற்றெடுத்த பிள்ளை அவர்களை கவனிக்காதது தான் இதற்குக் காரணம்.
பத்து மாதம் சுமந்து பல துயரங்களையும் தாங்கிக் கொண்டு பிள்ளையை பெற்றெடுத்த தாய் பகல் இரவாய் கண் விளித்து ஈ எறும்பு கடிக்காமல் வளர்த்து மேதினியில் கல்வி பெற வைத்து சொந்த காலில் நிற்கும் வரை ஆளாக்குகிறாள்.  தந்தை தன் இளமையை வீணடித்து தன் சுகம் முக்கியமல்ல தன் பிள்ளையின் சுகமே தன் சுகம் என்று எண்ணி ஊரை விட்டு ஊர் கடந்து தன் தாய் நாட்டை விட்டு வேறு நாட்டை நோக்கி சென்று உழைத்து தன் பிள்ளைக்குப் பிடித்த பொருள் வாங்கிக் கொடுத்து தன்னை ஆளாக்குகிறார்கள் .

வறுமையில் இருக்கும் பலர் தன் தாயை,  தந்தையை கண்ணுக்குள் போற்றி வைக்க முடியலையே என்று கவலையாகிறார்கள் . ஆனால் வசதி படைத்தவர்கள் தன் தாயை, தந்தையை முதியோர் காப்பகத்தில் போய் சேர்த்து விடுகிறார்கள். அல்லது மாத சம்பளத்திற்கு ஆளை வைத்து விட்டு, பெற்றோரை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இன்னும் சிலர் மாதத்திற்கொரு முறை 500 ரூபாயை அனுப்பி விட்டு தனது பொறுப்பு நீங்கிவிட்டது என்று எண்ணுகிறார்கள்.

முதிய வயதை அடைந்து விட்டால் அவர்கள் சிறு பிள்ளைக்கு சமமானவர்களே! சின்ன பிள்ளை நம்மை ஏதாவது சொன்னால் பொறுத்துக் கொள்ளத் தானே செய்வோம். அதைப் போன்று தான் பெற்றோர் எதையாவது சொன்னால் பொறுக்க வேண்டும். அதை விட்டு விட்டு, ஏய் கிளவி! ஏய் கிளடு! வாயை மூடு. எங்கையாவது ஒழிந்து போ, செத்து தொலை என்றெல்லாம் கூறக்கூடாது.
உம்முடைய ரப்பு  அவனைத் தவிர (வேறு எவரையும் எதனையும்) வணங்கலாகாது என்று விதியாக்கியுள்ளான். இன்னும் தாய் தந்தையருக்கு (நன்கு) உபகாரம் செய்ய வேண்டும் என்றும் (விதியாக்கி யுள்ளான்) அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவ்விருவருமோ உம்மிடத்தில் திண்ணமாக முதுமையை அடைந்து விட்டால் அவர்களை (நோக்கி) ‘சீ ‘ என்று சொல்ல வேண்டாம். அவ்விருவரையும் விரட்டாதீர்கள் . அவ்விருவருக்கும் கண்ணியமான சொல்லைக் கூறவும். (அல்குர் ஆன் 17:23)
பெற்றோர் தன் பிள்ளை வாந்தி எடுக்கும் போதும், மலஜலம் கழிக்கும் போதும் சுத்தம் செய்கிறார்கள் . அறுவறுப்பு படுவதில்லை. வெறுக்கவில்லை. நாறுதே என்று திட்டவில்லை. விரட்டவில்லை. ஆனால் அவர்கள் முதியோராய் மாறி மேற்கண்ட செயலை செய்தால் முகம் சுளித்து திட்டித்தீர்த் து விடும் நிலை. அன்று அவர்கள் நம்மை இதைப் போன்று திட்டி தீர்த்து சுத்தம் செய்யாமல் இருந்திருந்தால் நாம் எப்படி இருந்திருப்போம். சிந்திக்க வேண்டுமே!

பெற்றோரை கவனிப்பது ஆண் மக்களா? பெண் மக்களா? என்பதிலும் பிரச்சினை. பெண் பிள்ளைதான் தாயைக் கவனிக்க வேண்டும் என்று ஆண் வர்க்கத்தினரில் சிலர் கூறுகிறார்கள். ஆண் பிள்ளைதான் கவனிக்க வேண்டும் என்று பெண் வர்க்கத்தினரில் சிலர் கூறுகிறார்கள். ஆக ஒருவரையொருவர் குற்றம் சாட்டி தன் கடமையிலிருந்து தப்பிக்க நினைக்கின்றனர்.
அப்பொழுது அண்ணல் நபி (ஸல்) அவர்கள் உம் பெற்றோரில் யாரும் உயிருடன் உள்ளனரா? என்று வினவினார்கள். அதற்கு அவர் ஆம்! இருவரும் உள்ளனர் என்றார். நீ அல்லாஹ்விடம் நற்கூலியைத் தேடுகின்றீரா? என்று வினவினார்கள். அதற்கவர் ஆம் என்று கூறினார். அப்படியானால் உம் பெற்றோரிடம் திரும்பிச் சென்று அவ்விருவரிடமும் அழகிய தோழமையை கடைப்பிடிப்பீராக என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பகர்ந்தார்கள்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவிமடுத்துள்ளேன் . உங்களுக்கு முன் வாழ்ந்த மக்களில் மூவர் வெளியே நடந்து சென்றார்கள். இரவு நேரமாகி விட்டதால் ஒரு குகையில் இரவைக் கழிக்க நாடி அதனுள் நுழைந்தனர். அப்பொழுது ஒரு பாறாங்கல் மலையிலிருந்து உருண்டோடி வந்து அக்குகையில் வாசலை அடைத்துக் கொண்டது. அப்பொழுது அவர்கள் (ஒருவருக்கொருவர்) கூறிக் கொண்டனர். நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் நல் அமல்களைக் கொண்டு அல்லாஹூ தாஆலாவிடம் துஆச் செய்தாலே தவிர நீங்கள் ஈடேற்றம் பெற முடியாது.
அப்பொழுது அவர்களில் ஒருவர் கூறினார் இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். அவ்விருவரையும் முந்தி என் குடும்பத்தினருக்கோ எனது அடிமைகளுக்கோ நான் பாலைப் புகட்டமாட்டேன் . ஒருநாள் நான் விறகைத் தேடி வெகுதூரம் சென்று விட்டேன். (இரவில் வெகு நேரம் கழிந்து அவ்விருவரும் உறங்கிய பின்னரே நான் வீடு திரும்பினேன். அவர்களுக்கு (புகட்டுவதற்காக) பாலைக் கறந்தேன். அப்பொழுது அவ்விருவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை உறக்கத்தில் இருந்து எழுப்புவதையும் அவர்களுக்கு முந்தி என் குடும்பத்தார்களுக்கும் என் அடிமைகளுக்கும் பாலைப் புகட்டுவதையும் வெறுத்தேன். பால் சட்டியை கையிலேந்தியவனாக வைகரைப் பொழுது வரை அவர்கள் விழிப்பதை எதிர்ப்பார்த்துக் கொண்டேயிருந்தேன். அப்பொழுது என் குழந்தைகள் எனது காலடியில் பசியால் கத்திக் கொண்டிருந்தனர். (வைகறைப் பொழுதின் நேரத்தில்) அவ்விருவரும் எழுந்து பாலைப் பருகினார்கள்.