அம்மாவும், மனைவியும்!

 அம்மாவும், மனைவியும்!
ஒரு கீழ்த்தட்டு நடுத்தர கூட்டுக் குடும்பத்தின் இலக்கணப்படி, சாப்பாடு மட்டுமின்றி, அன்றாட நடவடிக்கைகளிலும் கடைஞ்செடுத்த சிக்கனத்தைப் புகுத்தியிருந்தார் என் அம்மா. அத்தோட கலகம் பண்றதுக்கு வீட்டில பையன்களும் கிடையாது. அதனால அம்மாவோட சிக்கன பட்ஜெட்டைக் கேள்வி கேட்பாரே இல்லை!! இப்படியாக, அம்மா சொல்பேச்சு கேட்டு, கொடுத்ததச் சாப்பிட்டும், கிடைச்சத உடுத்தியும், ’அடக்கமான பெண்களா’ வளர்ந்து வந்தோம்.
இதுல என்னன்னா, சமையல்ங்கிறது ஒரு பெரிய கஷ்டமான வேலையாவே படலை எனக்கு. நான் அடுக்களை பக்கம் போறதேயில்லைங்கிறது வேற விஷயம்!! இப்படியா சந்தோஷமா இருக்கும்போது, எனக்குச் சோதனைக்காலமும் வந்துச்சு - கல்யாணம்கிற பேர்ல!!
கல்யாணமாகி மாமியார் வீட்டுக்குப் போன மறுநாளே, காலையில டீயோட, ரெண்டு ‘ஹாஃப்-பாயில்’ வந்துது ரூமுக்கு!! விடியக்காலையிலயே முட்டையா, அதுவும் ரெண்டான்னு அதிர்ச்சியோட பார்த்தேன். எங்கூர்ல, ரெண்டு முட்டையில நாலு வெங்காயத்தை அரிஞ்சுப் போட்டு ஒரு குடும்பமே ஒருவேளைச் சாப்பாட்டை முடிச்சுப்போம். இங்க ஒருத்தருக்கே ரெண்டு முட்டையான்னுதான் முதல் அதிர்ச்சி. சரி, முதல் நாள்னு ஸ்பெஷலாத் தர்றாங்க போலன்னு எதுவும் சொல்லாம கஷ்டப்பட்டு சாப்பிட்டுகிட்டேன்.
ஆனா அடுத்த நாளும் அது தொடர்ந்துது!! இதுக்கிடையில ரங்க்ஸ் என்ன செய்வார்னா, நான் திக்கிமுக்கி ஒரு முட்டையைச் சாப்பிட்டு முடியுற வரை காத்திருந்து, நைஸா அவருக்குள்ள ரெண்டு ஹாஃப்-பாயில்ல ஒண்ணை என் பிளேட்ல தள்ளிவிட்டுட்டு, "அக்கா, இங்க பாரு, இன்னும் சாப்பிடாம உக்காந்திருக்கா"ன்னு அக்காவை வேற தூண்டிவிட்டுட்டுப் போவார். புதுப்பொண்ணாச்சே, முதல்லயே சுயரூபத்தைக் காட்டவேண்டாம்னு கோவத்தை அடக்கிட்டு இருந்தாலும், இயலாமையில கண்ணுல தண்ணி முட்டும் எனக்கு. ஏன்னா இதச் சாப்பிட்டுட்டு, அடுத்த அரைமணியில ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிடணும். வயத்துல இடம் வேணாமா? இப்படியே ஒரு வாரம் போனதும், பொறுக்கமுடியாம மாமியார்கிட்ட காலையில முட்டை வேண்டாம்னு மெதுவாச் சொல்லிட்டேன்.
மூணுவேளையும் விதவிதமான சாப்பாடுதான். சாப்பாடு வகைகளைப் பார்த்தாலே ஆச்சர்யமா இருந்துது. ஏன்னா, எங்க ஊர்ல நான் சொன்னதுபோல, "mass food"தான் நிறைய. ஆனா, இங்கயோ, அரிசிரொட்டி, பாலாடை, ஓட்டப்பம், ஆப்பம், ஜாலரப்பம், பத்திரினு எல்லாமே செய்றதுக்கு ரொம்ப நேரம் எடுக்கிற வகைகள். சரி, கல்யாண வீட்டு ஜோர்ல செய்றாங்கன்னு நினைச்சா, ஒரு மாசம் கழிச்சும் அதேபோல வகைதொகையாச் சாப்பாடு தொடரவும், முதல்முதலா நானும் இப்படியெல்லாம் சமைக்கணுமேன்னு எனக்கு பயம் வந்துது!! எவ்வளவு நாளைக்கு சாப்பிட்டுகிட்டு மட்டுமே இருக்க முடியும்?
அதுவுமில்லாம, ஒவ்வொரு சாப்பாட்டுக்கும் ஒரு காம்பினேஷன் வேற வச்சிருந்தாங்க. உதாரணமா, பாலாடைன்னா அதுக்கு தொட்டுக்க மட்டன் ரோஸ்ட்தான் வேணும். இல்லைனா, ‘புலி பசிச்சாலும்..’ கதைதான்!! எங்க வீட்லயோ, சப்பாத்திக்குச் சாம்பார்னாலும்கூட கேள்வியே கேட்காம சாப்பிட்டுக்கிடுவோம். அப்புறம், தேங்காய் - கேரளா பார்டர்ல உள்ளவங்களைக் கேக்கணுமா? ஒரு நாளைக்கு குறைஞ்சது ரெண்டு தேங்காய் செலவாச்சு. எங்கம்மா மகராசியோ, ஒருநாளைக்குள்ள மொத்தச் சமையலையே ரெண்டு கீத்து தேங்காயில முடிச்சுடுவாங்க!! இப்படி எல்லாத்துலயும் மலைக்கும், மடுவுக்குமான வித்தியாசம்!!
இப்ப நானும் இதேபோல சமையல் செய்யணுமேங்கிற கவலை என்னைப் பிடிச்சுகிச்சு. நல்லவேளை, நாலு மாசத்துலயே ரங்க்ஸ் அபுதாபி வந்துட்டதால பிழைச்சோம்னு கூடவே ஓடிவந்தேன். தனிக்குடித்தனம்தான்கிறதால ஒரு நிம்மதி. மெதுவா எல்லாம் செஞ்சு படிச்சுக்கலாம்னு ரெஸிப்பிகள் எழுதி வாங்கிட்டு வந்தேன். ரங்ஸை சோதனை எலியா வச்சு என் சமையல் ப்ராக்டிகல்களை ஆரம்பிச்சேன். முத முத, முட்டை மஞ்சக்கரு உடையாம ஒரு ஹாஃப்-பாயில் போட நான் பட்ட பாடு என்னைவிட ரங்க்ஸுக்குத்தான் நல்லாத் தெரியும்!! ஆச்சு, இப்படியே பரிசோதனை செய்ய ஆரம்பிச்சு பல வருஷங்கள் ஓடிப்போச்சு.
இப்ப அவர்கிட்ட என் சமையல் எப்படின்னு கேட்டா, முழுசா திருநெல்வேலியாவும் இல்லாம, நாகர்கோவிலாவும் இல்லாம, நடுவால வள்ளியூர்ல நிக்குதும்பார். சரி, 14 வருஷத்துல வள்ளியூர் வரை வந்தாச்சு. இன்னும் ஒரு ஏழெட்டு வருஷத்துல நாகர்கோவில் வந்துடாது?
இப்ப நல்ல முன்னேற்றம் இருக்கு. என்னன்னு கேக்குறீங்களா? ரங்க்ஸ் சோதனை எலியிலிருந்து சோதனைப் பெருச்சாளியா ஆகிட்டார். அவ்ளோ வெயிட் கூடிடுச்சு, இதுவும் முன்னேற்றம்தானே? ஆக, இப்படியே விட்டா நல்லதுக்கில்லைன்னு டயட்ல இருந்தோம்/இருந்துகிட்டேயிருக்கோம் நாங்க. அப்பாடா, சமையல்லருந்து ஓரளவு விடுதலைன்னு சந்தோஷப்படவும் முடியாது. நார்மல் சமையலைவிட, டயட் சமையல் செய்றது இன்னும் கொடுமை!!
அப்படி டயட்ல இருந்த ஒரு சுபயோகத் தினத்துல, வாப்பாவும், புள்ளையுமா உக்காந்து சாப்பிட்டுகிட்டு இருந்தாங்க. ரங்ஸோட கோட்டா முடிஞ்சும் நகராம உக்காந்துகிட்டிருக்க, நான் அதைக் கண்டுக்காம, மூத்தவனுக்கு மட்டும் பரிமாறிகிட்டிருக்க, "எனக்கு?"ன்னு அப்பாவியாக் கேட்டார். "அதான் மூணு தோசை வச்சேனே?"ன்னு சொல்லிட்டு கருமமே கண்ணாயிருக்க, அவர் புலம்ப ஆரம்பிச்சுட்டார்.
"ஹூம், எங்கம்மாவெல்லாம் நானே வேண்டாம்னாலும் விடமாட்டாங்க. கிட்ட உக்காந்து சாப்பிடுப்பான்னு அன்பா பரிமாறுவாங்க. ஏன், இப்ப ஊருக்குப் போனாகூட விடாம, எனக்காக அதைச் செஞ்சு, இதைச் செஞ்சு சாப்பிடுப்பான்னு தருவாங்க. நான் போதும்போதும்னு சொன்னாலும் கேக்காம, இன்னும் சாப்பிடுன்னு வச்சுத் தந்துகிட்டேயிருப்பாங்க. இங்க என்னடான்னா, எண்ணி எண்ணி சாப்பாடு போடுறே நீ?
புருஷனுக்கு அளந்து அளந்து சாப்பாடு போடுற அளவு கலி முத்திப் போச்சு!"ன்னு அவர்பாட்டுக்குப் பேசிகிட்டே போக, என் செல்ல மகன் இடைமறிச்சான். "வாப்பா, உங்க உம்மாவும் அப்படித்தானா? என் உம்மாவும் அப்படித்தான்! நான் வேண்டாம்னு சொன்னாலும் விடுறதில்லை; போதும்னாலும் விடாம சாப்பாடு வச்சுகிட்டே இருப்பா. சே, இந்த உம்மாக்களே ரொம்ப மோசம். இல்ல வாப்பா?" என்று சொல்ல, சார் முகத்தப் பாக்கணுமே!!

முழங்கியது போதும் வழங்குகள் உரிமைமையை!


முழங்கியது போதும் வழங்குகள் உரிமைமையை!
   ஃபாகிரா  
நாம் மேடையில் நின்று கொண்டு, ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாத்தில் பெண்களுக்கு இன்னின்ன உரிமைகள் வழங்கப்பட்டிருந்தன என்று முழங்கினால் மட்டும் போதாதுமாறாக, இஸ்லாம் அளித்துள்ள பெண்ணுரிமைகளை நடைமுறையில் செயல்படுத்திக் காட்டவேண்டும்.
பெண்களின் பிரச்னைகளும் அவற்றின் தீர்வுகளும் என்று பேசுவதற்கு முன்பு முதலில் பெண்களின் இருப்பு பற்றி புரிந்து கொள்ளவேண்டும். பெண்ணுரிமை என்ற பெயரில் எவ்வளவோ போராட்டங்கள் நடைபெற்றன. கோடிக்கணக்கான ரூபாய்கள் செலவழிக்கப்பட்டன. ஏராளமான முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன. அப்படியெல்லாம் இருந்தும் கூட பெண்களின் நிலைமையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. நீதி எனும் பெயரில் அநீதிகள்தான் அரங்கேறின. இன்றுவரை அந்த இழு பறியும் போராட்டமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
எல்லாரும் அறிந்த உண்மை என்னவென்றால், இஸ்லாம் பெண்களுக்கு அளித்துள்ள உரிமைகள் போன்ற இன்றைய நவீன உலகம் கூட அளிக்கவில்லை. இஸ்லாத்தில் பெண்களுக்கு எல்லாமே உண்டு. உரிமைகள் உண்டு. கண்ணியம் உண்டு. மரியாதை உண்டு. பாதுகாப்பு உண்டு. முஸ்லிம் பெண்களின் இந்த உரிமைகள் குறித்து இன்று அதிகம் பேசப்படுகின்றது. ஆனால் நடைமுறையில் அவை பேணப்படுவதில்லை.
தொடக்கத்திலிருந்தே மேற்கத்தியர்கள் முஸ்லிம் சமுதாயம் பற்றி தவறான கருத்துகளையே கொண்டிருந்தனர். ஆனால் நாம் கொள்கையை மட்டுமே சமர்ப்பிக்கிறோம். நடைமுறை உதாரணங்கள் தருவதில்லை. பெண்களை மேற்கத்தியப் பிடியிலிருந்து காப்பாற்ற என்ன செய்வது? நாம் மேடையில் நின்று கொண்டு, ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாத்தில் பெண்களுக்கு இன்னின்ன உரிமைகள் வழங்கப்பட்டிருந்தன என்று முழங்கினால் மட்டும் போதாது. மாறாக, இஸ்லாம் அளித்துள்ள பெண்ணுரிமைகளை நடை முறையில் செயல்படுத்திக் காட்டவேண்டும். அந்த உரிமைகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தடையாக உள்ளவற்றை எல்லாம் தகர்த்தெறியப் போராட வேண்டும்.
பெண்களின் எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு இஸ்லாத்தில் இருக்கிறது எனத் தெளிவாகக் குறிப்பிடலாம்.இஸ்லாத்தில் பெண்களுக்கு எந்த அளவுக்கு உரிமைகள் அளிக்கப்பட்டுள்ளன எனில் ஆண்களுக்கும் கூட அந்த அளவுக்கு உரிமைகளை அளிப்பதில்லை. ஆனால் நடைமுறையில் இந்த உரிமை பெண்களுக்குக் கிடைக்கிறதா எனும் கேள்வி எழுகிறது. சாதாரண முஸ்லிம்களை விடுங்கள். நல்ல மார்க்கப்பற்றுள்ள குடும்பங்களில் கூட பெண்களுக்கு சொத்துரிமை மறுக்கப்படுகிறது.
அன்னை கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் செய்தது போல் சுதந்திரமாக வணிகம் செய்ய அனுமதி தரப்படுவதில்லை. தங்களின் முழுமையான திறமையையும் ஆற்றலையும் பயன்படுத்தி பெண்கள் சமுதாயப் பணி செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. இஸ்லாத்தில் மட்டுமே பெண்களுக்கான ஈடேற்றமும் அமைதியும் உள்ளன என முஸ்லிம் பெண்கள் இதர பெண்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். அநீதிக்கும் கொடுமைக்கும் எதிராகக் குரல் எழுப்புவது ஈமானின் இறைநம்பிக்கையின் தேட்டமாகும். மனிதர்களாய்ப் பிறந்த நாம் சமுதாயத்தில் நடைபிணமாக இருக்கக் கூடாது. உயிர்த்துடிப்புடன் செயலாற்ற வேண்டும். அன்னை ஆயிஷா, அஸ்மா ஆகியோரின் சமூகக் களப்பணிகள் நமக்கு முன்மாதிரிகளாக விளங்க வேண்டும்.
பெண்கள் தங்களின் வீட்டைப் பராமரித்து நிர்வகிப்பதிலும் திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும். அதே சமயம் சமுதாயப் பணிகளிலும் தங்களின் முத்திரையைப் பதிக்க வேண்டும். சமூக சேவையில், சமுதாயப் பணிகளில் இன்று முஸ்லிம் பெண்கள் யாரேனும் சாதனை படைத்திருக்கிறார்கள் எனில், அவர்கள் இஸ்லாத்தைப் புறக்கணித்து விட்டு, அல்லது இஸ்லாத்தைக் குறை சொல்லிக் கொண்டுதான் அந்தச் சாதனையைப் புரிந்திருக்கிறார்கள். இஸ்லாமிய வரம்புக்குள் இருந்து கொண்டே, இஸ்லாம் தரும் உந்துசக்தியைக் கொண்டே நாம் சாதனைகள் படைத்துக் காட்டவேண்டும். இந்தியாவில் ஏழுகோடி முஸ்லிம் பெண்கள் இருக்கிறார்கள். இவர்களை வாய்மூடி மௌனிகளாக இருக்கச் செய்துவிட்டு இங்கே எந்தப் புரட்சியையும் நாம் கொண்டுவர முடியாது.
இந்தியப் பெண்கள் மீது இரண்டு விதமான கொடுமைகள் நடைபெறுகின்றன. ஒன்று பாரம்பர்யமாக நடைபெற்றுவரும் கொடுமைகள். குடும்ப வன்முறை, சமத்துவமின்மை, வரதட்சணை போன்றவை பாரம்பர்யக் கொடுமைகளாகும். மற்றொன்று நவீனத்தின் பெயரால் நடைபெறும் கொடுமைகள். பெண் விடுதலை, பெண்ணியம், பாலியல் சுரண்டல் போன்றவை. இந்த இரண்டு வகைக் கொடுமைகளுக்கும் பலியாவது பெண்கள்தாம். இந்தப் பாரம்பரியக் கொடுமைகளையும் நவீனக் கொடுமைகளையும் "கொடுமை’ என்று ஏற்றுக் கொள்ளவே பலர் தயாராக இல்லை.
முதலாளித்துவம், ஏகாதிபத்தியம், நுகர்வியம் போன்றவை தங்களின் சுயலாபத்துக்காகப் பெண்களைச் சுரண்டுகின்றன. இத்தகைய எல்லாவிதமான தீமைகளுக்கும் சுரண்டல்களுக்கும் ஒரே தீர்வு இஸ்லாம்தான். ஆனால் நாம் பேசிக்கொண்டே இருக்காமல் களத்தில் இறங்க வேண்டும். ஆந்திராவில் எழுதப் படிக்கத் தெரியாத ஒரு பெண், மதுக்கடைகளுக்கு எதிராகப் போராட்டத்தைத் தொடங்கினாள். அவளுடைய இடைவிடாத முயற்சியின் காரணமாக இன்று ஆந்திராவில் 800 மதுக்கடைகள் மூடப்பட்டுவிட்டன. இந்தச் சாதனை புரிய அவள் மாநாடு நடத்தவில்லை. சுவரொட்டிகள் ஒட்டவில்லை. பெரிய பெரிய "பயான்கள்’ எதுவும் செய்யவில்லை. ஆகவே நாமும் அதுபோல் களத்தில் இறங்கிப் பணியாற்ற வேண்டும்.
-சமரசம்