மனைவிக்குப் பிடிக்காத வார்த்தைகள்!



வார்த்தைகளால் ஒருவரை மகிழ்ச்சிபடுத்தவோ, வருத்தபடுத்தவோ முடியும். ஓர் உறவை மலரச் செய்யவோ, கருகச் செய்யவோ இயலும். `ஆண்களும் தன்மையான வார்த்தைகளும்’ என்பது அபூர்வமான கூட்டணி. அதிலும் கணவன்மார்கள் மனைவியிடம் சர்வ ஜாக்கிரதையாக வார்த்தைகளை பயன்படுத்தாவிட்டால் சிக்கல்தான்.
எனவே, கணவன்மார்களுக்கு உதவும் விதமாக, அவர்கள் மனைவியிடம் கூறக் கூடாத வார்த்தைகள் இங்கே...

'உன்னோட ரசனை மகா மட்டம்’
எப்படித்தான் இப்படி ஒரு ரசனையை வளர்த்துக்கிட்டியோ?’ என்று ஒருபோதும் கூறாதீர்கள். ஆரம்பத்தில் நீங்கள் அப்படிச் சொல்லும்போது லேசாக முகம் சுளிப்பவர், பின்னர் `பளீரென்று’ திருப்பி அடிக்கத் தொடங்குவார். மனைவி `சீரியல்’ பார்பது பிடிக்கவில்லையா? சத்தமில்லாமல் அடுத்த அறைக்கு நகர்ந்து விடுங்கள்.
'ரொம்ப குண்டாஆயிட்டே’
எந்த பெண்ணும் தான் குண்டாகி விட்டதாகக் கூறப்படுவதை விரும்ப மாட்டார். மனைவி உடம்பு குண்டாகிக் கொண்டிருந்தாலும் அதை `ஒல்லியாகக் காண வேண்டியது’ உங்கள் பொறுப்பு.
'உனக்கு சமைக்கவே தெரியல’
உங்கள் அம்மாவின் கைபக்குவமே தனிதான். அவர் சாதாரணமாக புளி காய்ச்சினாலும் ஊரையே வாசனை தூக்கும்தான். ஆனால் உங்கள் இல்லத்தரசியின் சமையலைத்தான் இனி ஆயூசுக்கும் சாப்பிட்டாக வேண்டும். எனவே பாராட்டாவிட்டாலும், குறை சொல்லாமல் இருப்பது உத்தமம்.
'உங்க குடும்பத்தில எல்லாருமே இப்படித்தானா?’
நாசுக்காக அதிருப்தியை வெளிபடுத்தும் மாமனார், மாமியார், நீங்கள் அணிகிற ஆடை முதற்கொண்டு உரிமையோடு எடுத்து பயன்படுத்துகிற மைத்துனன் என்று உங்களின் மனைவி வீட்டார் ஓர் இனிய (?) இம்சை. அதற்காக, `உங்க வீட்டுல எல்லாருமே இப்படித்தானா?’ என்றோ, `உங்க அப்பா, அம்மா, தம்பி, தங்கச்சி எல்லாருமே `வித்தியாசமா’ இருக்கீங்களே!’ என்றோ கடுப்பாய் `கமெண்ட்’ அடிக்காதீர்கள்.
'உன்னை விட உன் தங்கச்சி...’
'உன்னைவிட உன் தங்கச்சி அழகு, புத்திசாலித்தனம் எல்லாத்திலயும் ஒரு படி மேலே....’ என்று சொல்லித் தொலைக்காதீர்கள். (ஜாலியாக பேசுகிற பாணியில் `உண்மையை’க் கூற நினைத்தாலும்!) சில ஆசைகளை மனசுக்குள்ளே போட்டு பூட்டிக்கொள்வது, குடும்பத்தில் கலவரம் வெடிக்காமல் இருக்க உதவும்.
'எங்க அம்மா மாதிரியே இருக்கே’
பாராட்டுவதாக நினைத்துக் கொண்டு கூட, `எங்க அம்மா மாதிரியே இருக்கே’ என்று கூறிவிடாதீர்கள். அது சுயமாக சூனியம் வைத்துக்கொள்வது மாதிரி. போயும் போயும் `மாமியாருடனா’ ஒப்பிடுவது?
அதுமட்டுமின்றி கணவன் தன் மனைவியைப்பார்த்து 'உன்னுடைய முதுகு என் அம்மாவின் முதுகைப் போல்' என்று சொன்னால் 'தலாக்' நிகழ்ந்து விடும். எச்சரிக்கையாக இருக்கவும்