அகிலத்துக்கு அருட்கொடையாய் வந்துதித்த அண்ணல் நபி

அண்ணல் நபி (ஸல்) அரேபிய தீபகற்பத்திலே அப்துல்லாஹ், ஆமினா ஆகியோரின் தவப் புல்வராக வைகறைப் பொழுதில் திங்கள் காலை இவ்வையகத்திலே ரபீஉல் அவ்வல் மாதம் பிறை பன்னிரண்டில் இத்தரணியில் உதித்தார். ‘ரபிஉ’ என்ற அரபுப் பதம் வசந்தத்தைக் குறிக்கிறது. எனவே சிறப்புக்குரிய ரபிஉல் அவ்வல் மாதத்தில் பிறந்தது எமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. நபி (ஸல்) சிறிய வயது முதல் எல்லோருடனும் அன்பாகப் பழகுவார்கள். சிலை வணக்கத்தை வெறுத்தார்கள். ஏக இறைவனை வணங்கினார்கள.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தார்கள். அவர்கள் காலத்தில் வாழ்ந்த மக்கள் அவர்களைக் கருதியதைப்போல் அவ்வளவு முக்கியமாக உலகில் தோன்றிய எந்த மனிதரும் கருதப்படவில்லை. அவர்களுக்கு உஹதுப்போரின் போது ஒரு பல் முறிந்து விட்டது என்பதை அறிந்த உவைஸ¤ல் கர்னி அவர்கள் அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு அந்தப் பல் இல்லாத போது தமக்கு எதற்கு என்று கருதினார்கள். அது எந்தப் பல் என்று தெரியாதபோது தம் வாயில் உள்ள அத்தனை பற்களையும் தட்டி வீழ்த்திக்கொண்டார்கள்.
இதைப் பற்றிப் பிற்காலக் கவிஞர் ஒருவர், ‘உவைஸே! உலகத்திலுள்ளோர் அத்தனை பேர்களுடைய பற்களையும் ஏன் நீர் வீழ்த்தாது விட்டுவிட்டீர்? அல்லாஹ்வின் தூதர் அவர்களுக்கு பல் இல்லாதபோது உலகிலுள்ள மற்ற எவருக்குத்தான் பல் வேண்டும்?’ என்று உணர்ச்சிவசப்பட்டுப் பாடினார்.
நபி (ஸல்) அவர்களின் வாயிலிருந்து உதிர்ந்த அத்தனை சொற்களும் குறித்துக்கொள்ளப்பட்டன. அவர்களின் ஒவ்வோர் அசைவும் கவனிக்கப்பட்டது. அவர்களின் அசைவற்ற மெளனம் கூட சட்டங்களாகக் கருதப்பட்டது. அலி (ரலி) அவர்கள் ஒருமுறை பயணம் செய்யும் போது ஓர் இடத்திற்கு வந்ததும் திரும்பிப் பார்த்தார்கள். அந்த இடத்தில் அப்படித் திரும்பிப் பார்க்க எதுவும் இருக்கவில்லை.
எனினும் அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன் பயணம் செய்த போது நபி (ஸல்) அவர்கள் அவ்விடம் வந்ததும் திரும்பிப் பார்ப்பதைக் கண்டிருந்தார்கள். அதனால் தான் அவர்களும் அவ்விதம் செய்தார்கள். நபி (ஸல்) அவர்களின் தாடியில் ஒரு குறிப்பிட்ட வயதில் எத்தனை நரை முடிகள் இருந்தன என்பதைக் கூட மக்கள் கணக்கிட்டு வைத்தனர். அவர்கள் உலகை நீத்து ஆயிரத்து நானூறு ஆண்டுகள் ஆகிவிட்ட இன்றும்கூட அவர்கள் மீது அத்தகைய அன்பு கொண்ட மக்களுக்கு குறைவில்லை. அவர்களை அவ்வளவு முக்கியமாகக் கருதக்கூடிய மக்களுக்கும் கணக்கில்லை.
அன்றைய மக்கள் அவர்களை தம் கண்ணால் காணும் பேறுபெற்றார்கள். இன்றைய மக்களுக்கு அத்தகைய அரும்பேறு கிடைக்க இடமில்லை. எனவே இன்றைய மக்கள் அவர்கள் எப்படித்தான் இருப்பார்களோ என்று அவர்களைக் காண முடியாத தாபத்தால் தவிப்பது இயற்கை. அவர்களைப் பற்றி கேள்வியுற்று அவர்களைக் காண முடியாது தாபமுற்ற பாரசீக நாட்டார் தலைசிறந்த ஓவியர் ஒருவரை அவர்களின் உருவப்படம் வரைந்துவர அனுப்பி வைத்தனர். ஆனால் நபி (ஸல்) அவர்களோ அது உருவ வழிபாட்டிற்கு இடம் தந்துவிடும் என்று கருதி மறுத்துவிட்டார்கள். அவர்கள் மீதுள்ள அன்பால் அவர்களின் படம் இருக்கக் கூடாதா என்று எண்ணி ஏங்குவோர் ஏராளம் உண்டு.
‘யூசுப் (அலை) அவர்களைப் பார்த்ததும் எகிப்து நாட்டுப் பெண்கள் அவர்களின் பேரெழில் கண்டு தம் நிலை மறந்து தம் கைகளில் இருந்து மாம்பழங்களை அறுப்பதற்குப் பதிலாக தம் கரங்களில் இருந்த விரல்களை வெட்டிக்கொண்டார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்களை மட்டும் கண்டிருப்பார்களாயின் தம் கரங்களை அல்ல தம் இதயங்களை அறுத்துக்கொண்டிருப்பார்கள்’ என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகி றார்கள்.
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நடுத்தரமான உயரம் உள்ளவர்களாக இருந்தார்கள். அவர்களை நெட்டை யானவர்கள் குட்டையானவர்கள் என்றும் சொல்லமுடியாது. நடுத்தரமான உயரமான மனிதர்களை விட அவர்கள் சற்று உயரமானவர்கள் போல தோற்றமளிப்பார்கள்.

நபி (ஸல்) அவர்களின் நிறம்

நபி (ஸல்) அவர்களின் நிறம் கோதுமை நிறமுமல்ல. வெண்மை நிறமுமல்ல. அவர்களின் அழகு மேனி மஞ்சள் கலந்த வெண்மையாகவும் சிவப்பாயும் இருந்தது. அவர்களின் முகம், கை, கால்களின் நிறம் வெண்மை கலந்த சிவப்பாகும்.

அவர்களின் முடி

அவர்களுக்கு அதிகச் சுருள்கள் இல்லாத சுருட்டை உரோமம் இருந்தது. தலையிலிருந்த உரோமங்கள் அலை அலையாக சுருண்டு காட்சி வழங்கின. அவர்களின் தலைமுடி காதுக்குக் கீழாக கழுத்து வரை நீண்டிருந்தது.

தாடி

அவர்களுடைய தாடி, தலை, இரண்டிலுமாகச் சேர்த்து பதின்ஏழு நரைமுடிகள் இருந்தன. அவர்களின் அறுபதாவது வயதில் தலையிலும் தாடியிலும் இருந்த முடிகள் இருபதாகும். ஒரு முறை அபூபக்கர் (ரலி) அவர்கள் ‘அல்லாஹ்வின் தூதர் அவர்களே! தங்களுக்கு நரை ஏற்பட்டுவிட்டதே?’ என்று கூறியபோது ‘ஹுத், வாக்கிஆ, முர்ஸலாத், தக்வீர், ஆகிய அத்தியாயங்களே எனக்கு நரை தோன்றச் செய்துவிட்டன’ என்று கூறினார்கள்.

கண்கள்

அவர்களின் கண்கள் விசாலமான வையாகவும் அழகானவையாகவு மிருந்தன. கரு விழிகள் நல்ல கறுப் பானவை. வெண் விழிகள் செவ்வரி படர்ந்தவை. அவர்களின் கண்கள் சுருமாப் போடப்படாத நிலையிலும் சுருமாப் போடப்பட்டவை போலிருந்தது.

வாய்

சற்று பெரிய வாய் அவர்களுக்கமைந் திருந்தது. இரு உதடுகளும் அழ கானவையாகவும், கவர்ச்சிகரமான வையாகவுமிருந்தன. உதடுகளுக் கிடையில் பனிக்கட்டிபோல் அவர் களின் பற்கள் பளிச்சிட்டன. பற்கள் சற்று இடைவெளிவிட்டு அமைந் திருந்தன.

மார்பு

நபி (ஸல்) அவர்கள் பரந்த மார்புடையவர்களாயிருந்தார்கள். அவர்களின் மார்பு குழிகள் இல்லாமல் சமதளமாயிருந்தது. வயிறும் கொஞ்சம் சமமாய் இருந்தது. இரண்டு தோள்களுக்கும் இடையில் நல்ல இடைவெளி இருந்தது.
நபி (ஸல்) அவர்கள் பற்றி அபூஹுரைரா (ரலி) விபரிக்கையில், ‘அல்லாஹ்வின் தூதர் அவர்கள் சுத்தக்கட்டி வெள்ளியில் வார்த்தெடுக்கப்பட்டவர்கள் போன்று ஒளிர்வார்கள்’ என்று அவர்கள் கூறுகிறார்கள். அபூஹுரைரா (ரலி) அவர்கள் அடைந்த பேற்றை அடைந்த இன்னொருவர் ஜாபிர் (ரலி) அவர்கள்.
ஜாபிர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) பற்றி :- ‘நிலா ஒளிர்ந்த இரவொன்றில் அல்லாஹ்வின் தூதர் அவர்களைப் பார்த்தேன். அப்போது அவர்கள் சிவப்பு ஆடை அணிந்திருந்தனர். நான் ஒரு முறை அவர்களைப் பார்த்தேன். அடுத்து சந்திரனைப் பார்த்தேன். அவர்கள் சந்திரனை விட எத்தனையோ மடங்கு அதிக அழகுடையவர்களாய் இருந்தார்கள்.’

உடை

உடம்பிற்குப் பொருத்தமான ஆடைகளையே அணிவார்கள். சட்டை அணியும் போது முழுக்கைச் சட்டை அணிந்திருக்கிறார்கள். அவர்கள் ஒடுங்கிய கைகளையுடைய உரோம நாட்டு அங்கியை அணிந்திருந்ததாக முசீரா இப்னு ஷஃபா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

நடை

அவர்கள் நடக்கும் போது உயரமான இடத்திலிருந்து பள்ளத்தில் இறங்குவது போலிருக்கும். அவர்கள் முன் பக்கமாகச் சாய்ந்த வண்ணம் நடப்பார்கள். அவர்களின் நடை பெரு நடையாயிருக்கும். கால்களை இழுத்துக் கொண்டு நடக்க மாட்டார்கள்.

அமர்ந்திருத்தல்

நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாயல்களில் இரு பாதங்களையும் ஊன்றி வைத்துக்கொண்டு அமர்ந்திருப்பார்கள். சிலவேளைகளில் தம் கைகளால் கால்களைக் கட்டிக்கொண்டும் அமர்ந்திருப்பார்கள்.

உணவு

நபி (ஸல்) அவர்கள் உண்ணும் முறையிலேயே ஓர் ஒழுங்கு இருந்தது. உணவின் முன் அவர்கள் ஒருபோதும் கை கழுவாமல் அமரமாட்டார்கள். வலது கையால் உண்பார்கள். பாத்திரத்தில் முன் பக்கமிருந்து உணவை எடுப்பார்கள். விரிப்பின் மேல் அமர்ந்து உண்ணுவார்கள். சாப்பிட்ட பின் சுட்டு விரலையும் பிறகு பெரு விரலையும் சூப்புவார்கள். விரல்கள் சிவக்கும்வரை சூப்பிய பின்னரே கை கழுவுவது அவர்களின் வழக்கமாயிருந்தது.

உறக்கம்
முன் இரவில் படுத்து இளங்காலையில் எழுந்துவிடுவது அவர்களின் வழக்கமாயிருந்தது. முன் இரவில் அவர்கள் நன்றாக உறங்குவார்கள். வலப் பக்கமாக வலது உள்ளங்கையில் தலையை வைத்துக்கொண்டு உறங்குவார்கள். பின் இரவில் வலது முழங்கையை ஊன்றி உள்ளங்கையில் தலையை வைத்துக்கொண்டு உறங்குவார்கள்.

மெளலவி எம்.எஸ்.எம். ஹாரிஸ் (கபூரி) தும்புளுவாவ, ஹெம்மாதகம