லைலத்துல் கத்ர்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்.
லைலத்துல் கத்ர் என்பது,
ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப்படை நாட்களில் வரக்கூடிய ஓர் இரவிற்குச் சொல்லப்படும். இந்த இரவில் செய்யும் வணக்கத்திற்கு ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்திற்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மைகளை, அல்லாஹ் வழங்குகின்றான். அதாவது ஒரு இரவு செய்யும் அமலினால் 83 வருடங்கள் செய்யும் அமலுக்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மைகள் கிடைக்கின்றது. இதனால்தான் நபி கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் அந்த இரவை அடைந்து கொள்வதற்காக நோன்பின் கடைசிப்; பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். ’83 வருடம் நாம் வாழ்வோமா?’ என்பதே கேள்விக்குறியானது! ஆனால் ஒரு இரவில் செய்யும் அமலுக்கு அவ்வளவு நன்மையை அல்லாஹ் நமக்கு அள்ளி வழங்குகின்றான். இந்த அரிய சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள். ரமளான் மாதத்தின் மற்ற 20 நாட்களை விட கடைசிப் பத்து நாட்களில் நபி (ஸல்) அவர்கள் அதிக வணக்கத்தில் ஈடுபடுவார்கள். முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட கண்மணி நாயகம் நபி (ஸல்) அவர்களே இப்படி அதிக அமல்கள் செய்திருக்கும் போது, நம்மைப் போன்றவர்கள் எவ்வளவு அதிகம் அமல்களில் ஈடுபட வேண்டும் என்பதை சிந்தித்துப்பாருங்கள்! ஆகவே, இச்சிறப்பான இரவில் தொழுவது, குர்ஆன் ஒதுவது, திக்ர் செய்வது, பாவமன்னிப்புத் தேடுவது, தர்மம் செய்வது போன்ற நற்கருமங்களில் நாம் அதிகம் ஈடுபடவேண்டும்.
அல்லாஹ் நம் அனைவருக்கும் அந்த சிறப்பான இரவைப் பெற்று, நல் அமல்கள் புரிய வாய்ப்பளிப்பானாக!
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மத் வஅலா ஆலி முஹம்மத் வ பாரிக் வஸல்லிம்....