விஞ்ஞான வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு!

நவீன விஞ்ஞானம் விண்ணை முட்டும் அளவு வளர்ந்து விட்டது. அறிவியல் துறை கண்களை அகல விரித்து வியப்புடன் பார்க்கும் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது. இந்த அறிவியல் எழுச்சி, விஞ்ஞான வளர்ச்சிக்கு வித்தாக நின்று உழைத்தவர்கள் முஸ்லிம்கள்தான் என்பது முஸ்லிம்கள் பலருக்கும் தெரியாத செய்தியாகும்.
 
அறிவியலுடைய, விஞ்ஞானத்துடைய வரலாறு பற்றிப் பேசும் எவரும் இஸ்லாத்துடைய, முஸ்லிம்களுடைய பங்களிப்புப் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. மத்திய காலத்தில் அறிவியலின் வளர்ச்சி என்பது முஸ்லிம்களின் வரலாற்றில்தான் தங்கியிருந்தது.

இருள் அகற்றிய அறிவு தீபம்:
நபி(ஸல்) அவர்கள் இஸ்லாத்தைப் போதிக்க ஆரம்பித்த காலம் அரேபிய வரலாற்றில் ‘அய்யாமுல் ஜாஹிலிய்யா (அறியாமைக் காலம்) என வர்ணிக்கப்படுகின்றது. உலக வரலாற்றில் 500 – 1500 உட்பட்ட காலம் ‘மத்திய காலம்’ என்றும், ‘இருண்ட யுகம்’ என்றும் வர்ணிக்கப்படுகின்றது. இக்காலப் பகுதி இருள் சூழ்ந்த காலப் பகுதியாகக் காணப்பட்டது. இஸ்லாத்தின் எழுச்சியும், முஸ்லிம்களின் அறிவுத் தேடலும்தான் இருள் படிந்திருந்த உலகுக்கு அறிவு தீபம் ஏற்றி ஒளி கொடுத்தது. அறிவியலின் உச்சாணிக் கொம்பில் இருப்பதாகக் கொக்கரிக்கும் ஐரோப்பிய – அமெரிக்க நாடுகள் அன்று நாகரீகமோ, பண்பாடோ, நல்ல பழக்க – வழக்கங்களோ தெரியாமல் அறியாமையிலும், மௌட்டீகத்திலும் மூழ்கிக் கிடந்தன.

ஐரோப்பாவின் நிலை:
இஸ்லாம் வளர்ச்சி கண்ட போது முஸ்லிம் உலகும், ஐரோப்பிய உலகும் எப்படி இருந்தன என்பது பற்றி விக்டர் ராபின்ஸன் (victor Rabinson) தனது ‘மருத்துவத்தின் கதை’ (The Story of Medicine) என்ற நூலில் குறிப்பிடும் போது, ‘ஐரோப்பிய நாடுகள் சூரியன் மறைந்தவுடன் இருளில் மூழ்கி விடும். முஸ்லிம் ஸ்பெயினைச் சேர்ந்த குர்துபாவிலோ தெரு விளக்குகள் ஒளி விட்டுப் பிரகாசிக்கத் தொடங்கி விடும். ஐரோப்பா அழுக்கடைந்திருந்தது. குர்துபா (கொரடோவா)விலோ 1000 குளியலறைகள் கட்டியிருந்தார்கள்.
ஐரோப்பா துர்நாற்றத்தால் மூடுண்டு கிடந்தது. குர்துபாவில் வாழ்ந்தவர்களோ தமது உள்ளாடைகளை தினமும் மாற்றி வந்தார்கள். ஐரோப்பா சேற்றில் மூழ்கிக் கிடந்த போது, குர்துபாவில் தளம் போடப்பட்ட பாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. ஐரோப்பாவின் அரண்மனைக் கூரைகளிலேயே கரும்புகை படிந்திருந்த போது, குர்துபாவிலிருந்த மாளிகைகள் அரபுக் கலை நுட்பங்களால் அலங்கரிக் கப்பட்டிருந்தன. ஐரோப்பாவின் பிரபுக்களுக்கு கையெழுத்து போடத் தெரியாமலிருந்த காலத்திலேயே குர்துபாவின் சிறுவர்கள் பாடசாலைக்குப் போய்க் கொண்டிருந்தனர். ஐரோப்பாவின் மத குருமார்கள் ஞானஸ்நானச் சடங்குகளுக்குரிய சுலோகங்களை வாசிக்கத் தெரியாதிருந்த சமயத்தில் குர்துபாவின் ஆசிரியர்கள் பெரும் நூல் நிலையங்களை நிறுவிக் கொண்டிருந்தார்கள்!” என்று குறிப்பிடுகின்றனர்.
இந்தக் கூற்று ஒட்டுமொத்த ஐரோப்பிய உலகின் அறிவு மட்டத்தையும் நாகரிகப் பண்பாட்டு வீழ்ச்சியையும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.
அதே வேளை, முஸ்லிம் உலகின் அறிவியல் எழுச்சியை எடுத்துக் காட்டும் கூற்றாகவும் திகழ்கின்றது.

அறிவியலுக்கு எதிரான போர்:
ஐரோப்பா அறியாமையில் மட்டும் இருக்கவில்லை. அறிவியலின் பெரிய எதிரியாகவும் இருந்தது. அழிந்து போக இருந்த அறிவியல் பொக்கிஷங்களை இஸ் லாமிய உலகு தூசு தட்டி எடுத்து உயிர் கொடுத்துக் கொண்டிருந்த போது, மருத்துவம், வானியல், புவியியல் என்று விஞ்ஞானத்தைப் பாலூட்டிச் சீராட்டி வளர்த்துக்கொண்டிருந்த போது கிறிஸ்தவ உலகு அறிவியலின் குரல்வளையை நசுக்கிக் கொண்டிருந்தது. விஞ்ஞானிகளும், அறிவியல் ஆராய்ச்சியாளர்களும் தெய்வ நிந்தனை செய்வோராக கிறிஸ்தவ உலகால் பார்க்கப்பட்டனர். அவர்கள் கொடூரமான சித்திர வதைகள் மூலம் அழிக்கப்பட்டனர். அறிவியல் நூல் நிலையங்கள் தீ மூட்டப்பட்டன.
கிறிஸ்தவத்திற்கும், அறிவியலுக்குமிடையில் நடந்த இந்தப் போராட்டம் அறிவியலையும், விஞ்ஞானத்தையும் இறை மறுப்புக் குழியில் வீழ்த்தியது. அறிவியல் எழுச்சி என்பது பக்தியின் பெயரால் புத்தியைக் கெடுத்துக்கொண்டிருக்கும் தமது யுக்திக்கு முடிவு கட்டி விடும் என்ற அச்சத்தில் ஆன்மீகத்தின் பெயரில் அறிவுக்கு விலங்கிட்டு வந்தது கிறிஸ்தவ உலகு! சிந்திக்கவும், இயங்கவும் விடாமல் ஐரோப்பிய உலகைச் சிறைப்படுத்தியிருந்த இந்த விலங்கை உடைத்து அவர்களுக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுத்தவர்கள் முஸ்லிம்களே!

அறிவியல் பங்களிப்புக்கான அடிப்படை:
இஸ்லாம் அறிவையும், ஆராய்ச்சியையும் தூண்டுகின்றது. ஏனைய சமயங்கள் போன்று அது ஆன்மீகம் பற்றி மட்டும் பேசவில்லை. அது இயற்கையை ஆராயச் சொல்கின்றது. இதுவே அறிவியல் எழுச்சிக்கு அடிப்படையாக அமைந்தது.
இஸ்லாத்தின் முதல் தூது, ‘இக்ரஃ!” (ஓது! வாசி!) என்ற கட்டளையுடன்தான் ஆரம்பிக்கப்பட்டது. முதலில் இறங்கிய 5 வசனங்களும் வாசித்தல், கற்றல், எழுதுதல் என்ற அம்சங்களை உள்ளடக்கியிருப்பது சிறப்பாக கவனிக்கப்பட வேண்டியதாகும்.
அடுத்து, குர்ஆனின் போதனைகள் இயற்கை விஞ்ஞானத்தை ஆராயத் தூண்டுகின்றது.
ஒட்டகம் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது? வானம் எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது? மலைகள் எவ்வாறு நட்டப்பட்டுள்ளன? பூமி எவ்வாறு விரிக்கப் பட்டுள்ளது? என்பதை அவர்கள் பார்க்க வேண்டாமா?” (88:17-20)
‘இறக்கைகளை விரித்தவாறும், மடக்கியவாறும் இவர்களுக்கு மேலால் செல்லும் பறவைகளை இவர்கள் பார்க்கவில்லையா? அர்ரஹ்மானே அவற் றைப் பிடித்துக் கொண்டிருக்கின்றான். நிச்சயமாக அவன் யாவற்றையும் பார்ப்பவனாவான்.” (67:19)
‘நிச்சயமாக வானங்கள் மற்றும் பூமியைப் படைத்ததிலும், இரவு-பகல் மாறி மாறி வருவதிலும் சிந்தனையுடையோருக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.” (3:190-191)
‘உறுதியாக நம்பிக்கைகொள்வோருக்கு பூமியில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. உங்களுக்குள்ளேயும் இருக்கின்றன. நீங்கள் (சிந்தித்துப்) பார்க்க மாட்டீர்களா?” (51:20-21)

இவ்வாறு எண்ணற்ற ஆயத்துக்களை இதற்கு ஆதாரமாகக் கூறலாம். அறிவியல் துறையின் ஆய்வுக் கான ஆக்கத்தினையும், ஊக்கத்தினையும் அல்குர் ஆனும், அஸ்ஸ§ன்னாவுமே ஊட்டின என்பதை மாற்று மத ஆய்வாளர்களும் ஒப்புக்கொண்டிருப்பதை அவர்களின் எழுத்தோவியங்கள் எடுத்தோதுகின்றன.

முஸ்லிம்களின் பல்துறைப் பங்களிப்பு:
அறிவியலின் அனைத்துத் துறைகளையும் முஸ்லிம்கள் தொட்டார்கள். அதில் அவர்கள் உச்சக் கட்டம் வரை சென்றார்கள்.
அமெரிக்க விஞ்ஞான வரலாற்றாசிரியரான ஜார்ஜ் ஸார்ட்டன் (George Sarton) தனது ‘விஞ்ஞான வரலாறு பற்றிய அறிமுகம்’ (Introduction to the History of Science) என்ற நூலில் இது குறித்து பின்வருமாறு கூறுகின்றார்.
‘மனித இனத்துக்குத் தேவையான பிரதான பணிகள் அனைத்தும் முஸ்லிம்களால் நிறைவு செய்யப்பட்டு விட்டது. பெரும் தத்துவ ஞானியான அல்பராபி முஸ்லிமாகவே இருந்தார். மேலும் கணித மேதைகளான அபூகாமில், இப்றாஹீம் பின் ஸினான் ஆகியோரும் முஸ்லிம்களே. பெரும் புவியியலாளரும், கலைக்களஞ்சியவியலாளருமான அல்மஸ்வூதியும் ஒரு முஸ்லிமே. பெரும் வரலாற்றாசிரியரான அத்தபரியும் கூட ஒரு முஸ்லிமாகவே இருந்தார்!”
இதே போன்று ஸ்பெய்னின் அறிவியல் வரலாறு பற்றிக் கூறும் போது, ஸ்பெயினில் முஸ்லிம்கள் (Moors in Spain) என்ற நூலில் கணிதம், வானியல், தாவரவியல், வரலாறு, தத்துவம், சட்டம் முதலிய அறிவுத் துறைகள் ஸ்பெய்னில் நன்கு வளர்ச்சி பெற்றிருந்தன! என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முஸ்லிம்களும், மருத்துவமும்:
நோய்க்கு மருந்து செய்யக் கூடாது! என்று கிறிஸ்தவ உலகு நம்பிக்கொண்டிருக்கும் போது இஸ்லாம் மருத்துவம் பற்றிப் பேசியது. அனைத்து ஹதீஸ் நூற்களிலும் மருத்துவம் குறித்த ஹதீஸ்களைக் காணலாம். ஸஹீஹ§ல் புகாரியில் மட்டும் கிதாபுத் திப் என்ற மருத்துவம் பற்றிய பாடத்தில் சுமார் 30 நபிமொழிகள் மருத்துவம் பற்றிப் பேசுகின்றன. ‘நோய் வந்தால் மருந்து செய்யுங்கள்!” என்ற நபிமொழியும், ‘எல்லா நோய்களுக்கும் மருந்துண்டு!” என்ற நபிமொழியும் அது குறித்த ஆய்வை ஊக்கப்படுத்தின.
இவ்வகையில் முஸ்லிம்கள் பல்துறை மருத்துவம் குறித்தும் ஆய்வு செய்தார்கள். நபி(ஸல்) அவர்களே தேன், கருஞ்சீரகம், இரத்தம் குத்தியெடுத்தல் போன்ற மருத்துவ முறைகள் பற்றிப் பேசியுள் ளார்கள். நவீன மருத்துவத்தில் அவை இன்றும் பெரிதும் செல்வாக்குப் பெற்று வருகின்றது.
மருத்துவத் துறையில் அலீ இப்னு ஸீனாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும். ஐரோப்பாவில் Avicenne (அவி சென்னா) என அறிமுகமாகியுள்ள இவர் மருத்துவம் சம்பந்தமாக 17 நூற்களை எழுதினார். அவற்றில் அல்கானூன் பித்திப் (மருத்துவ விதிகள்) என்பது பிரதானமான தாகும். இந்நூல் 17 ஆம் நூற்றாண்டு வரை ஐரோப்பியப் பல்கலைக் கழகங்களில் பாடத்திட்டமாகத் திகழ்ந்தது. இந்நூலை மருத்துவ உலகின் பைபிள் என்றும், மருத்துவ உலகின் வேத நூல் என்றும் மாற்றார் புகழ்கின்றனர். (Encyclopaedia Americana)
இவ்வாறே இவர் ‘கிதாபுஷ் ஷிஃபா’ என்ற பெயரில் 18 பாகங்களைக் கொண்ட ஒரு நூலை எழுதினார். இந்நூல் மருத்துவத்துடன் தொடர்புபட்ட உளவியல் குறித்து விரிவாகப் பேசுகின்றது.
இவரது மருத்துவ சேவை அறிவியல் திறமைகளால் இவர் பல புகழாரங்களைப் பெற்றார். நவீன மருத்துவத்தின் தந்தை (Father of Modern Medicine) என ஐரோப்பாவில் இவரை அழைக்கின்றனர். இவ்வாறே இரண்டாம் அரிஸ்டாட்டில், ஷெய்குல் ரயீஸ் போன்ற பெயர்களால் இவர் சிறப்பித்து அழைக்கப்படுகின்றார்.
மருத்துவத் துறைக்கு இப்னு ஸீனா மட்டுமின்றி பல அறிஞர்களும் பங்களிப்புச் செய்துள்ளனர். ஹுனைன் பின் இஸ்ஹாக், அலி அத்தபரி, அர்ராஷி, அலீ பின் அப்பாஸ், அல்கும்ரி, முஹம்மத் அல்தமீமி, இப்னு ஜஷ்ஷார், அஷ்ஷஹ்ராவி போன்ற பல அறிஞர்களும் மருத்துவத் துறை சார்ந்த நூற்களை எழுதியும், புதிய கண்டுபிடிப்புக்களையும், நடைமுறைகளையும் அறிமுகப்படுத்தியும் வந்துள்ளனர். மருத்துவத் துறை யில் முஸ்லிம்களுக்கிருந்த அதீத ஈடுபாடு இலங்கை மன்னர்களுடன் முஸ்லிம்களுக்கு நெருக்கமான தொடர்பு ஏற்பட வழிவகுத்தது என்பதை இலங்கை வரலாறும் உறுதி செய்கின்றது.

வானியல் துறையும், முஸ்லிம்களும்:
ஆரம்ப காலம் தொட்டே அரேபியர் தூர இடங்களுக்கு வர்த்தகப் பயணங்களை மேற்கொண்டு வந்தனர். இஸ்லாம் வளர்ச்சி பெற்று இஸ்லாமிய சாம்ராஜ்யம் விரிவான போது அவர்களது வர்த்தக எல்லை உலகளாவிய அளவில் விருத்தி கண்டது. பாலைவனத்தில் பயணம் செய்யவும், கடல் மார்க்க மாகப் பயணம் செய்யவும் வானியல் அறிவு அவர்க ளுக்கு அவசியப்பட்டது.
அத்துடன் அல்குர்ஆன் வானம் பற்றியும், சூரியன்-சந்திரன்-, பிறையின் வளர்ச்சி – தேய்வு மற்றும் நட்சத்தி ரம் பற்றியெல்லாம் பல இடங்களில் பேசுகின்றது. இரவு – பகல் மாறி மாறி வருவது குறித்துச் சிந்திக்கு மாறும் குர்ஆன் கூறுகின்றது. எனவே அவர்கள் வானியல் ஆய்விலீடுபட்டனர். இன்று ஐரோப்பிய உலகு முஸ்லிம் அறிஞர்கள் அறிவியலுக்காற்றிய பங்களிப்பை மறைக்க முற்பட்டாலும், வானியலுடன் தொடர்புபட்ட பல பெயர்கள் அரபு மொழியில் அமைந்திருப்பதே முஸ்லிம்கள் இத்துறைக்கு வழங்கிய பங்களிப்பைப் பறைசாற்ற போதிய சான்றாகும்.
அல்குர்ஆனில் வானியல் கண்ணோட்டம் குறித்து நாஸா விஞ்ஞானியான பேராசிரியர் ஆம்ஸ்ட்ராங் கூறும் போது, ‘மிகச் சமீபமான நவீன வானவியல் விஷயங்கள் குறித்து ஒரு பண்டைக் கால எழுத்துச் சுவடி பேசுவது என்னை மெய் சிலிர்க்க வைத்து விட்டது. சாதாரண மனித அறிவுக்குட்பட்ட அளவில் நாம் அறிந்து வைத்திருக்கும் விஷயங்களுக்கும் அப்பாற்பட்டதை இந்த எழுத்துக்கள் தருகின்றன!” என்று குறிப்பிடுகின்றார்.
இது குறித்து ‘ஐரோப்பிய வளர்ச்சியின் ஒரு வரலாறு’ (A History of Development of Europe) என்ற நூல் பேசும் போது, ‘விஞ்ஞானத்தில் நாம் எவ்வளவு தூரம் முஸ்லிம்களுக்குக் கடமைப்பட்டுள்ளோம் என்ற உண்மையை ஐரோப்பியர் திட்டமிட்டு மறைத்து விட்டனர். மதத் துவேஷத்தாலும், போலியான தேசியப் பெருமையாலும் நடந்த அநீதி எக்காலமும் நிலைத்து விடாது! அரேபியர் ஐரோப்பியருக்களித்த அறிவுச் செல்வம் பற்றிய உண்மைகளை மறைத்த கிறிஸ்தவ உலகம், அதி விரைவில் தனது குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும். அரேபியர் நமக்களித்த அறிவை எல்லோரும் பார்க்கும் வண்ணம் வானத்தில் கூட எழுதி வைத்து விட்டார்கள். இதற்கு வானத்திலுள்ள விண்மீன்களுக்கு அவர்கள் அளித்துள்ள பெயர்களைப் பார்த்தாலே போதுமானதாகும்!” என்று குறிப்பிடுகின்றது.
வானியல் துறையில் முஸ்லிம்களின் எழுச்சி அப்பாஸிய ஆட்சிக் காலத்தில்தான் பெரிதும் வளர்ச்சி கண்டது. இந்திய – பாரஸீக – கிரேக்க வானியல் நூல்களை அரபு மொழியில் மொழியாக்கம் செய்து அவற்றை விமர்சன ரீதியில் முஸ்லிம் அறிஞர்கள் அணுகினர். பிரமகுப்தா போன்ற இந்திய வானியல் அறிஞர்களின் நூல்களும் மொழியாக்கம் செய்யப்பட்டது. சித்தார்த்த என்ற சமஸ்கிருத நூலும் அரபுல குக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பைத்துல் ஹிக்மா அமைப்பின் மொழியாக்கப் பணிகள் நூற்றுக்கணக்கான வானியல் அறிஞர்களை இஸ்லாமிய உலகில் உருவாக்கியது.
இஸ்பஹானைச் சேர்ந்த இப்றாஹீம் அல்பஷாரி என்பவர் முஸ்லிம்களில் முதன் முதலில் விண்பொருட்களின் குத்துயரத்தை கணக்கிட அஸ்துர்லாப் (கிstக்ஷீஷீறீஷீதீமீ) கருவியைக் கண்டுபிடித்தார். முஸ்லிம்கள் கஅபா திசையை அறியவும், தொழுகை நேரத்தை அறியவும் இக்கருவியைப் பயன்படுத்தி வந்தனர். இக்கருவியை மேற்குலகம் (ழிணீutவீநீணீறீ) கப்பல் பயணம் சார்ந்த விசயங்களுக்காக 17 ஆம் நூற்றாண்டு வரை பயன்படுத்தி வந்தது.
இவரைப் போன்றே வானியல் துறையில் அல்குவாரிஷ்மி குறிப்பிடத் தக்கவராவார். இவர் தயாரித்த வானியல் அட்டவணை பற்றி பேராசிரியர் ஹிட்டி குறிப்பிடும் போது, ‘இவரது வானியல் அட்டவணைகள் கிழக்கிலும், மேற்கிலும் மற்ற வானியல் அட்டவணைகளுக்கும், நூற்களுக்கும் அடிப்படைத் தளங்களாக அமைந்தன!” என்று குறிப்பிடுகின்றார்.
இவரைப் போன்றே ஹபஷ் அல்ஹாஸிப் என்பவர் சூரிய-சந்திர கிரகணங்கள் குறித்த ஆய்வையும், வானியல் தோற்றப்பாடுகளை ஆராய்வதற்காகவும் 40 ஆண்டுக ளைச் செலவிட்டார். சூரியனின் குத்துயரத்தைப் பயன்படுத்திக் கிரகணம் நிகழும் நேரத்தைக் கணிக்கும் முறையை முதன் முதலில் தந்தவர் இவராவார்.
இவ்வாறு பனூ மூஸா, அபூமஅஷர் அல்பல்கீ, அல்கின்தீ, தாபித் பின் குர்ரா அபுல் அப்பாஸ் பின் நய்ரீசீ அல்பத்தானி போன்ற பல அறிஞர்களும் வானியல் துறைக்கு பங்களிப்புச் செய்தனர். முஸ்லிம் கலீஃபாக்களும் அறிவியல் துறையின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணை நின்றனர். பல வானியல் ஆய்வு நிலையங்களை அமைத்து, அதில் பணியாற்ற ஆய்வாளர்களை அமர்த்தியும் அவர்கள் தமது பங்கைச் செம்மையாகச் செய்தனர். மொழி பெயர்ப்புப் பணிக்குப் பெரிதும் ஒத்துழைப்பாக அப்பாஸிய ஆட்சி திகழ்ந்தது.

முஸ்லிம்களும், புவியியல் துறையும்:
அல்குர்ஆன் வானம் பூமியின் படைப்புப் பற்றிப் பேசுகின்றது. புவி பற்றியும், மலைகள் புவிக்கு முளைகளாக அமைக்கப்பட்டிருப்பது குறித்தும், விளை நிலங்கள் குறித்தும் பேசுகின்றது.
‘நீங்கள் பூமியில் பயணித்து, அவன் படைப்பை எப்படி ஆரம்பித்தான்? என்பதைப் பாருங்கள்! பின்பு அல்லாஹ்வே மறு தடவையும் உற்பத்தி செய்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் யாவற்றின் மீதும் பேராற்றலுடையவன்.” (29:20)
மற்றும் பார்க்க: (6:11, 27:69, 30:42, 34:18)
எனவே, புவியில் பயணித்து ஆய்வு செய்யும் ஆர்வம் முஸ்லிம் உலகில் ஏற்பட்டது.
பிரச்சாரப் பணிக்காகவும், வர்த்தகத்திற்காகவும் தொடர்ந்து பயணம் செய்த முஸ்லிம்கள் புவியியல் அறிவை இயல்பிலேயே பெற்றனர். அடுத்துப் புவியெங்கும் இஸ்லாமிய சட்டம் நிலைநாட்டப்பட வேண்டுமென்ற அவர்களது தணியாத தாகமும், நாடுகள் பற்றிய அறிவில் அவர்களுக்கு ஆர்வத்தையூட்டின. இந்த வகையில் புவியியல் துறையில் அவர்கள் ஆர்வத்துடனும் ஆய்வுக் கண்ணோட்டத்துடனும் தடம் பதித்தனர். இதற்கு பரந்து விரிந்த இஸ்லாமிய சாம்ராஜ்யம் பெரிதும் துணையாக அமைந்தது.
பாரசீக வணிகரான சுலைமான் அல்தானி என்பவர் சீனா, இந்தியா போன்ற நாடுகளின் புவியியல் நிலை பற்றிய விவரங்களை முதன் முதலில் அரபியில் எழுதினார்.
அல்இத்ரீஸி என்ற அறிஞர் ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆசியா ஆகிய 3 கண்டங்களிலும் சுற்றுப் பயணம் செய்து ஆய்வுகள் செய்தார். சிசிலி மன்னர் இரண்டாம் ரொஜரின் கட்டளைப் பிரகாரம் முதன் முதலில் உலக வரைபடத்தை வரைந்து அதை வெள்ளித் தட்டில் பதித்தார். இவர் எழுதிய நுல்ஹதுல் முஸ்தாக் எனும் நூல் 70 தேசப் படங்களைக் கொண்டிருந்தது.
இப்னு பதூதா, நாஸிரே குஷ்ரு போன்ற பயணிகளின் பணிகளும் புவியியல் துறைக்குப் பெரும் பயனளிப்பதாக இருந்தது. நாஸிரே குஷ்ரு எழுதிய ‘ஸபர் நாமா’ எனும் நூல் அவரது பயண இலக்கிய நூலாகும்.
இந்தத் துறைகள் மட்டுமன்றிக் கணிதம், பௌதீகவியல், தாவரவியல், விலங்கியல் என அனைத்துத் துறைகளிலும் முஸ்லிம்கள் பெரும் பங்காற்றியுள்ளனர். இது வரலாற்றில் மறக்க முடியாத அளவுக்கு பளிச்சிடும் அம்சமாகும். ஐரோப்பிய உலகு மதத் துவேஷத்தின் காரணத்தினாலும், பிரதேச வேறுபாட்டின் காரணத்தினாலும் இந்த உண்மைகளை மறைக்க முயன்றாலும் நியாய உள்ளம் கொண்ட அறிஞர்கள் மூலம் இந்த உண்மை உறுதி செய்யப்பட்டு வருகின்றது.
கடந்த காலத்தில் மட்டுமல்ல இந்த நூற்றாண்டிலும் விஞ்ஞானத்தால் உறுதி செய்யப்படும் மார்க்கமாக இஸ்லாமே மிளிர்ந்து வருகின்றது. கிறிஸ்தவம் அறிவியல் உலகால் புறக்கணிக்கப்பட்டு விட்டது. ஐரோப்பாவின் வளரும் மார்க்கமாக இஸ்லாமே திகழ்கின்றது. இதற்கு இஸ்லாத்தின் விஞ்ஞானக் கருத்துக்களும், அறிவியலுடன் ஒத்துச் செல்லும் அதன் போக்குமே காரணமாகும். இந்த வகையில் அறிவியலை வளர்த்த இஸ்லாத்தை இந்த நூற்றாண்டில் அறிவியல் வளர்க்கப் போகின்றது (இன்ஷா அல்லாஹ்).
இதே வேளை, முஸ்லிம் உம்மத் கடந்த காலப் பெருமை பேசிக் காலத்தைக் கடத்த முடியாது. நிகழ்காலம் பெருமைப்படும்படியாக இல்லை என்ற கசப்பான உண்மையை நாம் ஏற்றேயாக வேண்டும்.
முஸ்லிம்கள் குர்ஆன் – சுன்னாவை விட்டும் தூரமானதாலும், இஜ்திஹாதின் வாயில் மூடப்பட்டு விட்டதாக அவர்கள் எண்ணியதாலும், தக்லீதின் பிடிக்குள் முஸ்லிம் உலகு சிக்குண்டதாலும் இந்தப் பின்னடைவு ஏற்பட்டது. இதே வேளை, மார்க்க ஆய்வு என்ற பெயரில் அர்த்தமற்ற ஆராய்ச்சியில் தமது ஆற்றல்களைச் செலவளித்தமையும் இந்த இழப்பை நமக்கு ஈட்டித் தந்துள்ளது. எனவே, முஸ்லிம் உலகு தமது முன்னோர்களின் அறிவியல் பணியைக் கையிலெடுக்க வேண்டும். அவர்களது ஆராய்ச்சி மனப்பான்மை நம்மிடம் வளர வேண்டும். மீண்டும் அதே உச்ச நிலையை முஸ்லிம் உம்மத் பெற்றாக வேண்டும். இந்த இலக்கை முஸ்லிம் உம்மத் அடைந்தால் இஸ்லாம் வெகு வேகமாக உலகை ஆளும் என்பது திண்ணமாகும்.
ஓர் அறிஞரிடம் ‘கிறிஸ்தவர்கள் அறிவியல் தொழில் நுட்பத்தில் முன்னணியில் இருக்க, முஸ்லிம்கள் இந்தத் துறையில் பின்னடைந்துள்ளனரே! என்ன காரணம்?” என்று கேட்ட போது, அவர் ஒரே வார்த்தையில் ‘மார்க்கத்தைப் புறக்கணித்தமை!” என்று கூறினார். முஸ்லிம்கள் இஸ்லாத்தைப் புறக்கணித்ததால் அறிவியலில் பின்னடைந்தனர். கிறிஸ்தவர்கள் மார்க்கத்தைப் புறக்கணித்ததால் அறிவியலில் உயர்வடைந்தனர் என்பதே அவரது கூற்றின் அர்த்தமாகும்.
இந்த உண்மையை உணராத முஸ்லிம் பெயர் தாங்கிய சில முஸ்லிம்களும் ஐரோப்பியர் போன்று மதத்தைப் பள்ளிக்குள் மட்டும் நிறுத்திக் கொள்ளாவிட்டால் அறிவியலில் முன்னேற்றம் காண முடியாது என்று பிரசாரம் செய்து வருகின்றனர். இது தவறாகும். ஐரோப்பியர் இருட்டில் விழித்துக் கொண்டுள்ளனர். அவர்களிடம் அறிவு உள்ளது வழிகாட்டல் இல்லை. முஸ்லிம்கள் பகலில் தூங்கிக்கொண்டுள்ளனர். எம்மிடம் வழிகாட்டல் உள்ளது அறிவுப் பற்றாக்குறை நிறைந்துள்ளது. இந்த நிலை நீங்கினால் உலகை வழிநடத்தும் தலைமைத்துவம் இஸ்லாமிய உம்மத்தின் கைக்கு வந்துவிடும். அந்தக் காலம் வெகு விரைவில் கனிய அல்லாஹ்விடம் இருகரம் ஏந்திப் பிரார்த்திப்பதுடன் கடமையுமாற்றுவோமாக!

நன்றி:- எஸ்.எச்.எம். இஸ்மாயில் ஸலஃபி