நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குழந்தைகள்.

நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு எத்தனை குழந்தைகள் இருந்தன என்பது நம் அனைவர்களுக்கும் தெளிவாகத் தெரியாது. ஆனால் சரித்திர ஆசிரியர்கள் மிகத் தெளிவாக தரீகுல் குமைஸ், ஜர்கானி, தல்கீஹ், அஸதுல் காபா, இஸாபா போன்ற நூல்களில் எழுதியுள்ளனர். இந்த தகவல்கள் நமக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது.

நபிகள் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பெண் குழந்தைகள் மொத்தம் 4.

1.    ஹ்ரத் ஜைனப் ரலியல்லாஹு அன்ஹா
2.    ஹஜ்ரத் ருகையா ரலியல்லாஹு அன்ஹா
3.    ஹஜ்ரத் உம்மு குல்தூம் ரலியல்லாஹு அன்ஹா
4.    ஹஜ்ரத் பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா.

நபிகள் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஆண் குழந்தைகள் மொத்தம் 5.

1.    ஹஜ்ரத் காஸிம் ரலியல்லாஹு அன்ஹு
2.    ஹஜ்ரத் அப்துல்லா ரலியல்லாஹு அன்ஹு
3.    ஹஜ்ரத் இப்றாஹிம் ரலியல்லாஹு அன்ஹு
4.    ஹஜ்ரத் தய்யிப் ரலியல்லாஹு அன்ஹு
5.    ஹஜ்ரத் தாஹிர் ரலியல்லாஹு அன்ஹு.

இதில் ஹஜ்ரத் தய்யிப், தாஹிர் ரலியல்லாஹு அன்ஹு என்ற இரு பெயர்களும் ஒருவரையே குறிப்பதாகும் என்றும், ஹஜ்ரத் அப்துல்லா ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கே தய்யிப், தாஹிர் என்ற பெயர்களும் இருந்தன என்றும் இருவேறு கருத்துக்கள் இருக்கின்றன.

முதய்யப், முதஹ்ஹர் ரலியல்லாஹு அன்ஹு ஆகிய இரு இரட்டைக் குழந்தைகள் இருந்தன என்றும் சிலர் கூறுகின்றனர். இந்தக் கூற்றுப்படி பார்த்தால் 7 ஆண் குழந்தைகள் என்று ஆகிறது. ஆனால் பெரும்பான்மையினர்களின் கருத்துப்படி மூன்று குழந்தைகள் என்றே குறிப்பிடப்படுகிறது.
ஹஜ்ரத் இப்றாஹிம் ரலியல்லாஹு அன்ஹு தவிர மற்ற எல்லோர்களும் அன்னை கதீஜா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் வயிற்றிலேயே பிறந்துள்ளனர். ஹஜ்ரத் காஸிம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள்தான் முதலில் பிறந்தவர்கள். பெரும்பான்மையோர் கூற்றுப் படி இவர்கள் தங்கள் இரண்டாம் வயதில் காலமானார்கள்.

இரண்டாவது மகனாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் நபிப்பட்டம் கிடைத்தபிறகு பிறந்ததார்கள். இதனால்தான் அவர்களுக்கு தய்யிப், தாஹிர் என்று பெயர் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இவர்களும் சிறுவயதிலேயே மறைந்து விட்டார்கள்.

மூன்றாவது குழந்தையான ஹஜ்ரத் இப்றாஹீம் ரலியல்லாஹு அன்ஹுஅவர்கள் உம்மஹாத்துல் முமினாகிய ஹஜ்ரத் மரியத்துல் கிப்திய்யா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் மணி வயிற்றில் ஹிஜ்ரி 8, துல்ஹஜ் மாதத்தில் பிறந்தார்கள்.இவர்கள்தான் நபிகளாரின் இறுதிக் குழந்தை.
ஹிஜ்ரி 10 ரபீயுல் அவ்வல் 10 அன்று இவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்தார்கள்.
பெண் குழந்தைகள்:

1.ஹஜ்ரத் ஜைனப் ரலியல்லாஹு அன்ஹா.

இவர்கள்தான் மூத்தவர்கள். அண்ணலாருக்கு 30 வயதில் அதாவது திருமணம் முடிந்து ஐந்து வருடம் கழித்து இவர்கள் பிறந்தார்கள்.
தங்களது சிறிய தாயாரின் குமாரரான ஹஜ்ரத் அபுல் ஆஸ் இப்னு ரபீஃ ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மணமுடித்துக் கொடுக்கப்பட்டார்கள்.
இவர்களுக்கு ஹஜ்ரத் அலீ ரலியல்லாஹு அன்ஹு என்ற ஆண் குழந்தையும், ஹஜ்ரத் உமாமா ரலியல்லாஹு அன்ஹா என்ற பெண் குழந்தையும் பிறந்தன.

ஹஜ்ரத் அலீ அவர்கள் தான் மக்கா வெற்றியின் போது நபிகளாரோடு ஒட்டகை மீது உட்கார்ந்திருந்தார்கள். இவர்கள் அண்ணலாரின் ஜீவிய காலத்திலேயே மறைந்து விட்டார்கள்.

பெண் குழந்தையான ஹஜ்ரத் உமாமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் நபிகளார் அவர்கள் மறைந்த பின்னும் உயிருடன் இருந்தார்கள். ஹஜ்ரத் பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் மரணத்திற்குப் பின்பு ஹஜ்ரத் அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இவர்களைத் திருமணம் செய்து கொண்டார்கள். இத் தம்பதிகளுக்கு குழந்தை இல்லை.

ஹஜ்ரத் அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மறைவிற்குப் பின் ஹஜ்ரத் முகைரா இப்னு நவ்பல் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைத் திருமணம் செய்து கொண்டார்கள். இத் தம்பதிகளுக்கு யஹ்யா ரலியல்லாஹு அன்ஹு என்ற ஆண் குழந்தை பிறந்ததாகவும் சிலர் அவ்வாறில்லை என்றும் கூறுகின்றனர். இந்த அம்மையார் அவர்கள் ஹிஜ்ரி 50 ல் காலமானார்கள்.
2.ஹஜ்ரத் ருகையா ரலியல்லாஹு அன்ஹா.

நபிகளாரின் இரண்டாவது மகளாக ஹஜ்ரத் ஜைனப் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் பிறந்து மூன்று வருடங்கள் கழித்து இவர்கள் பிறந்தார்கள்.இவர்கள் அபூலஹபுடைய மகன் உத்பாவை திருமணம் செய்திருந்தார்கள். அபூலஹபின் பேச்சைக் கேட்டு நபிகளாரின் மகளான இவர்களை உத்பா விவாகரத்து செய்து விட்டான். திருமணம் சிறுவயதிலேயே நடந்திருந்தது. தாம்பத்திய உறவு ஏற்பட்டிருக்கவில்லை.

இவர்களை ஹஜ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். தம் கணவருடன் இருமுறை அபினீசியா நாட்டிற்கு ஹிஜ்ரத் செய்திருக்கிறார்கள். அண்ணலார் மதீனாவிற்கு ஹஜ்ரத் செய்யும் முன்பே இவர்கள் மதினா சென்று விட்டார்கள். பத்ரு சண்டை நடந்த போது இவர்கள் கடும் நோய்வாய் பட்டிருந்தார்கள். எனவே இவர்களை கவனிக்கும் பொறுப்பை ஹஜ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கொடுக்கப்பட்டிருந்தது. பத்ரு வெற்றியை சொல்ல வரும் போது மக்கள் அன்னை ருகையா நாயகியை அடக்கம் செய்துவிட்டு வந்து கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு அபின{சியாவில் வைத்து அப்துல்லாஹ் என்ற ஆண் குழந்தை பிறந்து தனது 6வது வயதில் மறைந்து விட்டது.

3.ஹஜ்ரத் உம்முகுல்தூம் ரலியல்லாஹு அன்ஹா.

அண்ணலாரின் மூன்றாவது மகளாக பிறந்த இவர்களை அபூலஹபின் மகன் உதைபா திருமணம் செய்திருந்தார். தம் தந்தையின் பேச்சைக் கேட்டு தம் மனைவியை விவாகரத்து செய்து விட்டார். சிறுவயதிலேயே திருமணம் முடிந்திருந்ததால் தாம்பத்திய உறவு ஏற்படவில்லை.

ஹஜ்ரத் ருகையா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் மறைவிற்குப் பிறகு ஹஜ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு இவர்களை திருமணம் செய்து வைத்து, அண்ணலார் அவர்கள் சொன்னார்கள் 'எனது மகள் உம்முகுல்தூமை வஹி அறிவிக்கப்பட்ட பின் ஹஜ்ரத் உதுமான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு திருமணம் செய்து கொடுத்தேன். எனக்கு 100 பெண் மக்கள் இருந்து ஒருவர்பின் ஒருவராக மரணமடைந்து கொண்டேயிருந்தாலும் அத்தனைப் பெண் மக்களையும் உதுமானுக்கே மணமுடித்துக் கொடுப்பேன்' என்றார்கள். அண்ணலாரின் இரு பெண் மக்களை மணந்ததால் ஹஜ்ரத் உதுமான் அவர்களுக்கு தின்னூரைன் என்ற பட்டப்பெயர் கொண்டு அழைக்கப்பட்டார்கள்.

இந்த அம்மையார் அவர்கள் ஹிஜ்ரி 9 ஷஃபான் மாதம் காலமானார்கள்.

4.ஹஜ்ரத் பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா.

சுவர்க்கத்துப் பெண்களின் தலைவியான அன்னை பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அண்ணலாருக்கு நான்காவதாக நபிப்பட்டம் கிடைத்து ஒருவருடம் கழித்து பிறந்தார்கள். வஹீ மூலம் அறிவிக்கப்பட்டு 'பாத்திமா' என்று பெயர் சூட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

ஹிஜ்ரி 2ம் ஆண்டு ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் திருமணம் நடந்தது. திருமணம் நடந்து ஏழு மாதங்கள் 15 நாட்கள் கழித்துதான் தாம்பத்திய உறவு நடந்தது. திருமணத்தின்போது இந்த அம்மையாருக்கு வயது 15 வருடம் 5 மாதமாகும். ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு வயது 21, ஐந்து மாதம் என்றும் 24 வருடம் ஒன்றரை மாதம் என்றும் இரு கருத்துக்கள் இருக்கின்றன.

அண்ணலாருக்கு மிகவும் உகப்பானவர்கள் இவர்கள்தான். ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இரண்டாவதாக திருமணம் முடிக்க நாடியபோது மிகவும் வருத்தமுற்று தமது தந்தையிடம் இவர்கள் சொல்ல, அதற்கு அண்ணலார் அவர்கள் 'பாத்திமா எனது உடலின் ஒரு பகுதியாகும். அவருக்கு வேதனை அளிப்பவர் எனக்கு வேதனை அளித்தவர் போலாகிறார்' என்று சொன்னார்கள். இதற்குப் பிறகு ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அன்னை பாத்திமா இருக்கும் வரை வேறு திருமணம் செய்து கொள்ளவில்லை.

அண்ணலாரின் மறைவிற்குப் பிறகு ஆறு மாதங்கள் கழித்து ஹஜ்ரத் பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் மறைந்தார்கள். அண்ணலாரின் சந்ததி இவர்களின் வழித்தோன்றல்களிலிருந்தே இன்றுவரை வந்து கொண்டிருக்கிறது.

இத் தம்பதிகளுக்கு 6 குழந்தைகள் பிறந்தன. ஆண் குழந்தை 3. பெண் குழந்தை 3. திருமணம் நடந்து 2 வது ஆண்டில் ஹஜ்ரத் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் 4 வது ஆண்டில் ஹஜ்ரத் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் பிறந்தார்கள். இவர்களுக்குப் பிறகு ஹஜ்ரத் முஹ்ஸின் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பிறந்து சிறு வயதிலேயே மறைந்து விட்டார்கள்.

ருகையா என்ற பெண் குழந்தை பிறந்து சிறுவயதிலேயே மறைந்து விட்டது. மற்றொரு பெண் குழந்தையான உம்முகுல்தூம் ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் முதல் திருமணம் ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களோடு நடந்து 'ஜைது' என்ற ஆண் குழந்தையும், ருகையா என்ற பெண் குழந்தையும் பிறந்தது. ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மறைவிற்குப் பின் ஹஜ்ரத் உம்முகுல்தூம் அவர்களின் திருமணம் ஹஜ்ரத் அவுன் இப்னு ஜஃபர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் நடந்தது. இவர்களுக்கு குழந்தை ஏதும் பிறக்கவில்லை. அவர்களின் மறைவிற்குப் பின் மூன்றாவதாக அவர்களது சகோதரர் ஹஜ்ரத் முஹம்மது இப்னு ஜஃபர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் நடந்தது. இவர்களைக் கொண்டு ஒரு பெண் குழந்தை பிறந்து அது சிசுவிலேயே மறைந்து விட்டது.

பிறகு இவர்களும் மறைந்து விடவே இவர்களின் மற்றொரு சகோதரரான அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் நான்காவதாக திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை ஏதும் பிறக்கவில்லை.இதற்குப் பிறகு இவர்கள் மறைந்தார்கள். அதே தினத்தில் இவர்களது மகனான ஹஜ்ரத் ஜைது அவர்களும் மறையவே இருவரின் ஜனாஸாக்களும் ஒரே சமயத்தில் எடுத்து செல்லப்பட்டது. இவர்களை திருமணம் முடித்த சகோதரர்கள் ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் சகோதரரின் குமாரரான ஹஜ்ரத் ஜஃபர் தய்யார் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மகன்களாவார்கள்.

ஹஜ்ரத் பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் மூன்றாவது மகளாரின் பெயர் ஹஜ்ரத் ஜைனப் ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் திருமணம் ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு ஜஃபர் அவர்களுடன் நடந்தது. இவர்களுக்கு ஹஜ்ரத் அப்துல்லா ரலியல்லாஹு அன்ஹு ஹஜ்ரத் அவுன் ரலியல்லாஹு அன்ஹு ஆகிய இரு ஆண்மக்கள் பிறந்தனர். இதற்குப் பிறகு இவர்கள் மறைந்து விட்டார்கள்.

ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு அன்னை பாத்திமா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் மூலம் பிறந்த குழந்தைகள் இவர்கள்தான்.

மற்ற மனைவிகள் மூலம் ஹஜ்ரத் அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் ஆண் 16, பெண் 16.

ஹஜ்ரத் இமாம் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ஆண் மக்கள் 15, பெண் மக்கள் 18 மொத்தம் 33.

ஹஜ்ரத் இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ஆண் 6, பெண் 3 மொத்தம் 9.