பயணங்களில் நோன்பு நோற்றல்

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்.' (அத்தியாயம் 2 ஸூரத்துல் பகராவின் 183வது வசனம்).

எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்மறையில் நோன்பு விசுவாசிகள் அனைவரும் மீதும் கடமை என்பதைக் குறிப்பிட்டுவிட்டு அதன் பயனைப் பற்றிக் குறிப்பிடும்போது விசுவாசிகள் அனைவரும் இறையச்சமுடையோர் ஆகலாம் என்று கூறுகிறான். இவ்வாறு விசுவாசிகள் அனைவரையும் இறையச்சமுடையோராக்கும் நோன்பை நாம் எவ்வாறு நோற்க வேண்டும் என்பதை அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்திருக்கிறார்கள்.

மேலும் எல்லாம் வல்ல அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்:

'(இவ்வாறு விதிக்கப் பெற்ற நோன்பு) சில குறிப்பட்ட நாட்களில் (கடமையாகும்) ஆனால் (அந்நாட்களில்) எவரேனும் நோயாளியாகவோ, அல்லது பயணத்திலோ இருந்தால் (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்னால் வரும் நாட்களில் நோற்க வேண்டும்; எனினும்(கடுமையான நோய், முதுமை போன்ற காரணங்களினால்) நோன்பு நோற்பதைக் கடினமாகக் காண்பவர்கள் அதற்குப் பரிகாரமாக ஒரு மிஸ்கீனுக்கு (ஏழைக்கு) உணவளிக்க வேண்டும்;. எனினும் எவரேனும் தாமாகவே அதிகமாகக் கொடுக்கிறாரோ அது அவருக்கு நல்லது - ஆயினும் நீங்கள் (நோன்பின் பலனை அறீவீர்களானால்), நீங்கள் நோன்பு நோற்பதே உங்களுக்கு நன்மையாகும் (என்பதை உணர்வீர்கள்)' (அத்தியாயம் 2 ஸூரத்துல் பகரா 184 ஆம் வசனம்).

அல்லாஹ்வால் விசுவாசிகள் மீது விதிக்கப்பட்ட நோன்பு ஒரு குறிப்பிட்ட நாட்களில் (ரமழானில்) நோற்கப்பட வேண்டும் என்று அருள்மறை குர்ஆன் கூறுகிறது. இவ்வாறு கடமையாக்கப்பட்ட நோன்பை நோற்க முடியாத நிலையில் உள்ள நோயாளிகள், வயோதிகர்கள் நோன்பு நோற்பதற்கு பகரமாக ஏழைகளுக்கு நோன்பு நோற்கவும், நோன்பு திறக்கவும் உணவளிக்க வேண்டும் என்றும் அருள்மறை குர்ஆன் கூறுகிறது. மேலும் பயணத்தில் இருப்பவர்களைப் பற்றி குறிப்பிட்டு விட்டு, அவர்கள் செய்ய வேண்டியதென்ன என்பதை கீழ்க்காணும் அருள்மறை வசனம் தெளிவாக்குகிறது:

'..எனினும் எவர் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருக்கிறாரோ (அவர் அக்குறிப்பிட்ட நாட்களின் நோன்பைப்) பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்;. அல்லாஹ் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர, உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை. குறிப்பிட்ட நாட்கள் (நோன்பில் விடுபட்டுப் போனதைப்) பூர்த்தி செய்யவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அல்லாஹ்வின் மகத்துவத்தை நீங்கள் போற்றி நன்றி செலுத்துவதற்காகவுமே (அல்லாஹ் இதன் மூலம் நாடுகிறான்)..' (அத்தியாயம் 2 ஸூரத்துல் பகரா - 185வது வசனத்தின் கடைசி பகுதி).

அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல் )அவர்களின் காலத்தில் பயணம் என்பது இன்றைய கால கட்டத்தைப் போன்று அத்தனை எளிதானதன்று. ஏனெனில் அன்றைய நாட்களில் பாலைவனத்தில் பயணிப்பதற்கு வாகனம் என்றால் ஒட்டகம் மாத்திரமே உண்டு. இன்று இருப்பது போன்று பளிங்கு போன்ற தார் சாலைகளோ, சாலைகளில் பறக்கும் கார்களோ, இரும்புத் தண்டவாளத்தில் ஓடும் இரயில் வண்டிகளோ, விண்ணில் பறக்கும் விமானமோ கிடையாது. இருக்கும் மண் சாலைகளிலும் வழிகாட்டிகளோ  பசியெடுத்தால் உண்ண உணவு விடுதிகளோ  களைப்பாயிருந்தால் தங்கி ஓய்வெடுக்க ஓய்வகங்களோ கிடையாது. இருப்பினும் ரமழான் மாதங்களில் பாலைவனத்தில் பயணம் செய்யும்போது அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்களும், அவர்களின் அன்புத் தோழர்களில் வலிமையுடையவர்களும் நோன்பு நோற்றிருக்கிறார்கள் என்பதை ஹதீஸ்களின் வாயிலாக நாம் அறிந்து கொள்ள முடிகிறது. பயணத்தில் இருப்பவர்கள் நோன்பு நோற்பது பற்றி அருள்மறை குர்ஆன் கூறுவது போன்று அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் வாழ்விலும் நமக்கு வழிகாட்டுதல்கள் இருக்கின்றன:

நபித்தோழர் ஹம்ஸா பின் அம்ரில் அஸ்லமி (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடத்தில் ''பயணத்தில் நான் நோன்பு நோற்கலாமா?'' என்று கேட்டார்கள். ஹம்ஸா பின் அம்ரில் அஸ்லமி (ரலி) அவர்கள் அதிகமதிகம் நோன்பு நோற்பவராக இருந்தார்கள். அவரிடம் நபி(ஸல்) அவர்கள் 'நீர் விரும்பினால் நோன்பு நோற்பீராக: நீர் விரும்பினால் நோன்பு நோற்காமல் விட்டு விடுவீராக!' என்று கூறினார்கள் என அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதார நூல்: புஹாரி 1943, முஸ்லிம் 2621, அபூதாவூத் 2402, திர்மிதி 711, நஸயீ 2383, இப்னுமாஜா 2383, 1662, அஹ்மத்).

மேற்கண்ட ஹதீஸிலிருந்து பயணம் மேற்கொள்ளும்போது உடல் வலிமையையும், நோன்பு நோற்பதற்கான வசதி வாய்ப்புகளையும் பெற்றிருப்பவர்கள் நோன்பு நோற்கலாம் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்த போது ஒரு மனிதர் நிழலில் தங்கவைக்கப் பட்டு மக்கள் (அவரைச் சற்றிலும்) குழுமியிருந்ததைக் கண்டார்கள். ''இவருக்கு என்ன நேர்ந்தது?'' என்று கேட்டார்கள். ''இவர் நோன்பு நோற்றிருக்கிறார்'' என்று மக்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் (பலவீனமான நிலையில் உள்ளவர்கள்) பயணத்தில் நோன்பு நோற்பது நற்செயல் அன்று' என்று கூறினார்கள்' என ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அறிவிக்கிறார். (ஆதார நூல்: புகாரி - 1946, முஸ்லிம் 2607).

(ஒரு பயணத்தில்) நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் இருந்தோம். (அன்று) தம் ஆடையால் தமக்குத்தாமே நிழலிட்டுக் கொண்டிருந்தவரே எங்களில் அதிக நிழல் பெற்றவராகத் திகழ்ந்தார். (அந்த

அளவுக்கு வெயில் கடுமையாக இருந்தது. ஒதுங்க நிழல் இல்லை).
நோன்பு நோற்றவர்கள் எந்த வேலையும் செய்யவில்லை. நோன்பு நோற்காமல் இருந்தவர்கள் வாகனங்களை (ஒட்டகங்களை) எழுப்பி (தண்ணீர் புகட்டியும், தீனி போட்டும்) வேலை செய்தார்கள். நோன்பாளிகளுக்கு (ஓய்வெடுக்கக் கூடாரம் அடித்தும்) பணி புரிந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், ''இன்று நோன்பு நோற்காமல் விட்டவர்கள் (மறுமையில் அதிக) நன்மையைக் கொண்டு சென்று விட்டார்கள்'' என்று கூறினார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதார நூல்: புகாரி 2890, முஸ்லிம்).

மேற்கண்ட ஹதீஸ்களிருந்து ரமலான் மாதத்தில் தாம் மேற்கொள்ளும் பயணம் முழுவதிலும் நோன்பின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, நோன்பைத் தொடர முடியுமெனில் அவர்கள் நோன்பு நோற்றுக் கொள்ளலாம். அவ்வாறு முடியாதவர்கள் நோன்பை விட்டுவிட்டு பின்னர் அதனை மற்றொரு நாளில் நோற்கலாம் என்பதை அறிந்து கொள்ளலாம்.

நாம் எவ்வாறு அல்லாஹ் இட்டக் கட்டளையை ஏற்று வணக்க வழிபாடுகளை செய்கின்றோமோ, அதுபோல வணக்கவழிபாடுகளில் அல்லாஹ் அளித்த சலுகைளை பயன்படுத்த வேண்டிய சரியான வேளைகளில் பயன்படுத்துவதும் நம்மீது கடமையாகும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவரது நோன்புகளையும் அங்கீகரித்து, 'ரய்யான்' என்னும் சுவன வாசல் வழியாக நம்மைச் சுவர்க்கத்தில் நுழையச் செய்வானாக!..